மதுரையில், இரவுக் காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு ஆண் நண்பருடன் திரும்பிய பெண்ணைக் கடத்திச்சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆண் நண்பரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தலைமைக் காவலர், பெண்ணுக்கு நிகழ்த்திய கொடுமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. மதுரை வில்லாபுரம் கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அவனியாபுரம் பகுதியில் பைப் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 27-ந்தேதி மகேஷ், கம்பெனியில் பணிபுரிந்துவரும் தனது தோழி ஒருவரை அழைத்துக் கொண்டு மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். செல்லூரில் உள்ள தியேட்டரில் செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு இரவு 1.30 மணி அளவில் வீட்டுக்குத் திரும்பி உள்ளார். இருவரும் ஜோடியாக நேதாஜி சாலை அருகே சென்ற போது, ரோந்துப்பணியில் இருந்த முருகன் என்ற தலைமைக் காவலர் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி உள்ளார். அவர்களிடம் தவறாகப் பேசி அவமரியாதை செய்ததோடு, மகேஷை மிரட்டி 11 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு, மேலும் 20,000 ரூபாய் தரவேண்டும் என பிளாக்மெயில் செய்துள்ளார். மகேஷின் மொபைல் போன், ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு மீதள்ள பணத்தை கொடுத்து விட்டு பெற்றுச்செல்லும் படி மிரட்டி உள்ளார். மகேஷுடன் வந்த பெண் ஊழியரை, தான் வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி, தலைமைக்காவலர் முருகன் அழைத்துச்சென்றுள்ளார். அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் அப்பகுதியில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து விட்டு, அதன் பின்னர் அந்த பெண்ணை கடுமையாக மிரட்டி ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் மனமுடைந்த அந்த பெண் சம்பவத்தன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், முதல் நிலை காவலர் முருகன் மீது பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கற்பழிப்பு, கொலை மிரட்டல் விடுத்தல், பணம் பறித்தல், கடத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அவர்மீதான புகார்கள் உறுதியானதை அடுத்து, முதல்நிலைக் காவலர் முருகனை போலீசார் கைது செய்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments