உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் புதிய வகை ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவக்கூடியதாக கருதப்படுவதால் கவலைக்குரிய விஷயம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் நவம்பர் 11 ஆம் தேதியன்று ஒரு பயணியிடம் முதல் முதலாக புதிய வகை கொரோனா உருமாற்றத்தைக் கண்டு ஆய்வாளர்கள் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். மூன்று நாட்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பால் ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள B.1.1.529 என்ற இந்த புதிய வகை உருமாறிய கொரோனோ வைரஸ், உருமாறிய டெல்டா வைரசை விடவும் அபாயகரமானதாக கருதப்படுகிறது. தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாமலும், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி விட்டு இது பாதிக்கக் கூடியதாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மிகவும் வேகமாகப் பரவக் கூடியதாகவும், நோய் முற்றி தீவிரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடிய அளவுக்கோ அல்லது மரணத்தையும் விளைவிக்கக் கூடியதாகவோ இருக்கலாம் என்பதால் இது கவலைக்குரிய விஷயம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. டெல்டா வைரஸ் அதன் ஸ்பைக் புரோட்டினில் 9 வகையில் தான் உருமாற்றம் கொண்டது. ஆனால் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தனது ஸ்பைக் புரோட்டீனில் மிக அதிக அளவாக 32 வகைகளில் உருமாற்றமடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஹாங்காங், இஸ்ரேல், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் பெல்ஜியத்திற்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர்கள். துருக்கி வழியாக எகிப்து சென்று விட்டு பெல்ஜியத்திற்கு வந்த ஒரு இளம் பெண்ணுக்கு ப்ளூ காய்ச்சல்போன்ற அறிகுறிகள் தென்பட்டன. தடுப்பூசி போடாத அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்தப்பெண்ணுக்கு தென் ஆப்பிரிக்காவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், புதிய வைரஸ் உலகில் பரவத் தொடங்கி விட்டதாக கருதப்படுகிறது. டெல்டா வைரசின் மரபணு மாற்ற தொடர்ச்சி என்று கூற இயலாத புதிய வடிவம் எடுத்துள்ளது ஒமிக்ரான். இதன் உருமாற்றத்தை அடையாளப்படுத்த சிவப்பு, பர்ப்பிள், மஞ்சள், நீலம், பச்சை என்று நிறங்கள் குறிக்கப்பட்டுள்ளன. சிவப்பு என்பது அதி தீவிரமான நிலை என்றும், பச்சை என்பது குறைந்தபட்ச பாதிப்பை உண்டாக்க கூடியதாகவும் மருத்துவ நிபுணர்கள் அடையாளப்படுத்தி உள்ளனர். புதிய உருமாறிய ஒமிக்ரான் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகள் அதனை ஆராய்ந்து அறிந்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் வெளியாக சில வாரங்கள் ஆகலாம் என்று உள்ள நிலையில், ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகளை தீவிரப்படுத்தி உள்ளன. 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்தியாவும் தென் ஆப்பிரிக்கா உள்பட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கடுமையான பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments