பெங்களூருவில் வசித்து வந்த துர்கா (40), முனிராஜ் (50) ஆகிய இருவரும் கோவிட் முதல் அலையில் பாதிக்கப்பட்டு ,பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள ஈ.எஸ் .ஐ மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூலை 2-ம் தேதி இறந்துள்ளனர். கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் , நோயாளிகளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் , மருத்துவமனை நிர்வாகமே தகனம் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த வகையில் நோயாளிகளின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டதுடன், உடல்கல் தகனம் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
ஓராண்டிற்கு மேலாகிவிட்ட நிலையில் சமீபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அவர்களின் உடல் இன்னும் மருத்துவமனை பிணவறையில் தான் உள்ளது என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. துர்காவுக்கு கொரோனா என்று கண்டறிந்தபோது நிலைமை மோசமாக இருந்ததால் வேறெங்கும் இடம் கிடைக்காமல் கடைசியாக ஈ.எஸ் .ஐ யில் அனுமதித்துள்ளனர். அனுமதித்த 4 நாட்களில், அவள் இறந்திருக்கிறார் .
அந்த சமயத்தில், மருத்துவமனையே தகன ஏற்பாடுகள் செய்வர் என்று உறவினரிடம் தகவல் கூறியுள்ளனர் . சில தினங்களில், பெங்களூரு நகராட்சியிலுந்து (BBMP ) துர்காவின் உடலை தகனம் செய்துவிட்டதாக கூறியுள்ளனர். 15 மாதங்களுக்கு பிறகு திடீரென அவர் உடல் மருத்துவமனையில் இருப்பதாக கூறியதும் நம்புவதா வேண்டாமா என்று குழப்பமான நிலையில் பதறியுள்ளனர் துர்காவின் குடும்பத்தினர்.
இதே நிலைமை தான் முனிராஜ் தரப்பினருக்கும். இத்தகைய அலட்சியத்தால் இறந்தவரின் குடும்பங்கள் மிகுந்த மனஉளைச்சலில் வருந்துகின்றனர். 2020 ஆம் ஆண்டு ,அந்த மருத்துவமனையின் பழைய பிணவறையில், 6 சேமிப்பு ஐஸ் பெட்டிகள் மட்டுமே இருந்ததாகவும், பற்றாக்குறையால், 10 ஐஸ் பெட்டிகள் கொண்ட புதிய பிணவறை டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
பழைய பிணவறையை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் ஒருவித துர்நாற்றத்தை உணர்ந்துள்ளனர். அப்போது தேடிப்பார்த்ததில் , ஐஸ் பெட்டியில் பாதி அழுகிய நிலையில் இவ்விருவரின் உடலையும் கண்டறிந்துள்ளனர். கோவிட் மரணங்கள் குறைந்துவிட்டதால் , பழைய கிடங்கு பயன்படுத்தப்படாமல் இருந்ததாகவும், அதனால் அங்கு ஐஸ் பெட்டியில் இருந்த இவ்விருவரின் உடல்கள் மீது கவனம் தப்பியது என்றும் மருத்துவனையில் சிலர் கூறியுள்ளனர். மருத்துவமனையின் இந்த அலட்சிய போக்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அமைப்பினரும் , அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து போராடி வருகின்றனர்.
ராஜாஜிநகர் எம்எல்ஏ சுரேஷ்குமார், இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை கோரி கர்நாடக தொழில் துறை அமைச்சர் சிவராம் ஹெப்பாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த அலட்சியத்துக்கு இஎஸ்ஐ மருத்துவமனையும், பிபிஎம்பி யும் தான் பொறுப்பு என்றும் கூறியுள்ளார். "இது மனிதாபிமானமற்ற பொறுப்பற்ற செயல்" என்று கூறும் சுரேஷ் குமார், இந்த அலட்சியம் குறித்து முறையான விசாரணை கோரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- கார்த்திகா ஹரிஹரன்
மாணவ பத்திரிகையாளர்
from Latest News
0 Comments