Ticker

6/recent/ticker-posts

Ad Code

சசிகலா அதிமுக-வில் இணைந்தால் யாருக்கு லாபம்?!

`` ஒரு வீடு இருக்கிறது, அது நமது பெயரில் உள்ளது. இப்படியிருக்க, இதே வீட்டில் முன்பு வசித்த ஒருவர் வாசலில் வந்து நின்று வீடு என்னுடையது என்று சொன்னால் அது நியாயமா? அப்படித்தான் சசிகலா அ.தி.மு.க-வுக்கு உரிமை கொண்டாடுகிறார்" இப்படியொரு விளக்கத்தைக் கொடுத்தது வேறு யாருமல்ல, முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இணை ஒருஙகிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிதான்.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா

சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் சேர்த்துக்கொள்வதால், தேர்தலில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுவதில்லை. பா.ஜ.க எப்படி சுமையாக இருக்கிறதோ, அதேபோல்தான் சசிகலாவும் கட்சிக்கு சுமையாக இருப்பார் என்பதை எடப்பாடி தரப்பு நன்கு உணர்ந்திருக்கிறது. எனினும், சசிகலாவை சேர்த்துக்கொள்வதால் யாருக்கு லாபம்? யாருக்கெல்லாம் நஷ்டம்? என்றொரு கணக்கையும் பார்க்கவேண்டியிருக்கிறது. இது குறித்து அ.தி.மு.க சீனியர் ஒருவரிடம் பேசினோம். “எந்தக் கட்சியாக இருந்தாலும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் தலைவர்களாக இருந்தால் அவர்கள் ‘கேஸ்ட் நியூட்ரல் லீடர்’ என்று அழைக்கப்படுவார்கள். ஜெயலலிதா அப்படியான தலைவராகத்தான் இருந்தார். எனினும், பின்னணியில் சசிகலா இருந்துகொண்டு கட்சியை வழிநடத்தியதால் அ.தி.மு.க முக்குலத்தோர் கட்சி என்ற பார்வையிலேயே பார்க்கப்பட்டது. ஜெயலலிதா மறைந்து, எடப்பாடி ஆட்சியமைந்தது முதல் அ.தி.மு.க கவுண்டர் கட்சி என்ற நிலைக்கு வந்துவிட்டதாகப் பேசப்பட்டது.

பன்னீர்

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி ஆகிய மும்மூர்த்திகள் கட்சியை கட்டுப்படுத்தி வைத்திருப்பதை பன்னீரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களை பன்னீர்செல்வத்தால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அதனால்தான், சசிகலா கட்சிக்குள் வந்தால் ஓரளவு தனது சமூகத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று நினைக்கிறார். இருந்தபோதும், கட்சியில் கையெழுத்துப் போடும் உரிமையை ஒருபோதும் சசிகலா தட்டிச்சென்றுவிடக் கூடாது என்கிற எண்ணமும் ஓ.பி.எஸ்-ஸிடம் இருக்கிறது. சசிகலா ஒருவேளை கட்சித் தலைமைக்கழக நிர்வாகிகளால், பொதுக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவரது வருகை அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே லாபத்தைக் கொடுக்கும். தென் தமிழகத்தில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கவும் வாய்ப்புக் கிடைக்கும்.

சசிகலா, பன்னீர்

நஷ்டம் என்பது நிச்சயம் எடப்பாடி அண்ட் கோ-வுக்குத்தான். ஏனெனில், சசிகலாவை கட்சியில் இணைத்து பதவி கொடுக்காமல் சும்மா வைத்திருக்க வாய்ப்பே இல்லை. காலியாக இருக்கும் அவைத்தலைவர் பதவியைக் கண்டிப்பாக கேட்டுப்பெற வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க-வில் அவைத் தலைவர் என்பது கட்சித் தலைவர் பதவிக்குச் சமமானப் பொறுப்பு. முன்பு பொதுச்செயலாளர் அதிகாரத்தையும், தற்போது ஒருங்கிணைப்பாளர்கள் அதிகாரத்தையும் தாண்டிய அதிகாரப் பதவியாக இல்லை என்றாலும், பொதுக்குழு தொடங்கி, ஆலோசனைக் கூட்டம் வரை தலைமை தாங்கும் பதவி இது.

சசிகலா - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

Also Read: சசிகலாவுக்கு ஆதரவாகப் பன்னீர்... தேவர் ஜெயந்தியில் புதுத் திட்டம்?! #VikatanExclusive

எந்தப் பதவியுமே இல்லாத போதே ஜெயலலிதாவுக்குப் பின்னால் இருந்துகொண்டு கட்சியையே ஆட்டுவித்தவர் சசிகலா. மத்திய பா.ஜ.க அரசின் நெருக்குதலையும் தாண்டி எடப்பாடியை முதல்வராக அமர்த்திவிட்டுச் சிறை சென்றவர் சசிகலா. கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அ.தி.மு.க தலைமை தெரிவித்துக் கொண்டிருக்கும்போதும் அ.தி.மு.க கொடி கட்டிய காரில் வலம் வந்துகொண்டும், அ.தி.மு.க கொடியை ஏற்றி, பொதுச் செயலாளர் என்ற கல்வெட்டையும் திறந்து கெத்து காட்டி வருகிறார் சசிகலா. இப்படிப் பட்டவரை கட்சிக்குள்ளே கொண்டுவந்தால் என்ன நிலை ஏற்படும் என்பது எடப்பாடி அண்ட் கோ-வுக்குத் தெரியும். அவைத் தலைவர் பதவி கொடுத்தாலும், கட்சி நிர்வாகிகளை தன்வசப்படுத்தி எப்படியும் பொதுச் செயலாளர் பதவிக்குக் காய் நகர்த்துவார் என்பது எடப்பாடிக்கும் தெரியும், பன்னீருக்கும் தெரியும்.

எனவே சசிகலா வருகை என்பது பன்னீர்செல்வத்துக்கு ஒருவகையில் லாபம் என்றால், இன்னொரு வகையில் நஷ்டம். அதுவே எடப்பாடிக்கு எப்படிப் பார்த்தாலும் நஷ்டம் மட்டுமே” என்பதோடு முடித்துக்கொண்டார்.



from Latest News

Post a Comment

0 Comments