தென்காசியில் மாணவர்களை பள்ளிக்கு ஏற்றிவரச்சென்ற பள்ளி வாகனத்தின் எமர்ஜென்ஸி எக்சிட் ஜன்னல் உடைந்து தானாக சாலையில் விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மறுஆய்வுக்குட்படுத்த வேண்டிய அத்தியாவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... தென்காசி ரயில் நிலைய சாலையில் உள்ள எம்.கே.வி.கே மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு சொந்தமாக ஏராளமான பள்ளிவாகனங்கள் உள்ளன. அதில் ஒரு பள்ளி வாகனம் ஒன்று வெள்ளிக்கிழமை காலையில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேகமாக சென்றது. அப்போது அந்த மினி பேருந்தின் எமர்ஜென்ஸி எக்ஸிட் என்று அழைக்க கூடிய அவசரகால வழி ஜன்னல் தனாக கழன்று சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக எந்த ஒரு வாகன ஓட்டியும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. அதே நேரத்தில் அந்த வாகனத்தின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் முந்திச்சென்று பள்ளி பேருந்து ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சாலையில் விழுந்து கிடந்த அவசரவழி கால ஜன்னலை தூக்கி வந்து பேருந்துக்குள் வைத்தார் ஓட்டுனர். பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் போது ஜன்னல் கழண்டு விழுந்து இருந்தால் ஏதாவது விபரீதம் அரங்கேறி இருக்கும். தமிழகம் முழுவதும் வருகிற 1 ந்தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்க உள்ள நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஓட்டை உடைசலான பள்ளி பேருந்துகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments