Ticker

6/recent/ticker-posts

Ad Code

உயிருள்ளவரை உஷா... கொலையில் முடிந்த ஒரு தலை ராகம்..!

பெங்களூரில் காதலிக்க மறுத்த பெண்ணுடன் போட்டோஷாப்பில் குடித்தனம் நடத்திய தமிழக இளைஞர் ஒருவர், அந்த பெண்ணைக் கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவைச் சேர்ந்தவர் 25 வயதான உஷா. இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணா என்பவரும் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று உஷாவை சந்தித்து பேசிய கோபால கிருஷ்ணா அவரை சராமரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கோபாலகிருஷ்ணாவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் கெத்துலாபுரம் கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கோபாலகிருஷ்ணா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசுக்குத் தகவல் கிடைத்தது. இருவரது சடலங்களையும் கைப்பற்றிய போலீசார், பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில், உயிருள்ளவரை உஷா என்ற கோபால கிருஷ்ணனின் ஒருதலைராகம் வெளிச்சத்திற்கு வந்தது.. உஷாவும், கோபாலகிருஷ்ணாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் நண்பர்களாகப் பழகி வந்தனர். அப்போது உஷாவை, கோபாலகிருஷ்ணா ஒருதலையாக காதலிக்கத் தொடங்கியுள்ளார். தன்னுடைய போட்டோவையும் , உஷாவின் போட்டோவையும் தனக்குத் தெரிந்த அளவில் போட்டோஷாப்பில் ஒட்டி வைத்து, ஆர்டினில் அம்பு விட்டு கணவன் மனைவியாக பாவித்து கற்பனையில் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உஷாவிடம் கோபாலகிருஷ்ணா தனது காதலை நேரில் தெரிவித்தபோது, அதனை ஏற்க மறுத்த உஷா, தான் ஏற்கனவே வேறு ஒருவரைக் காதலித்து வருவதாக பதிலளித்துள்ளார். ஆனாலும் உஷாவின் மீதான காதலைக் கைவிட மறுத்த கோபாலகிருஷ்ணா அடிக்கடி அவரை சந்தித்து நீ இல்லையென்றால், உயிரை விட்டு விடுவேன் என்று கூறி தன்னைக் காதலிக்கும்படி காதல் பிச்சை கேட்டுள்ளார். இதனால் உஷா, கோபாலகிருஷ்ணாவை சந்திப்பதையே முழுமையாகத் தவிர்த்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் மல்லசந்திரா கிராமம் அருகே உள்ள வீட்டில் வைத்து உஷாவை சந்தித்த கோபாலகிருஷ்ணா, தன்னைக் காதலிக்கும்படி மீண்டும் உஷாவை வற்புறுத்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உஷா, கோபாலகிருஷ்ணாவை கடுமையாக எச்சரித்து வீட்டை விட்டு வெளியேறும்படி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணா, உஷாவை சரமாரியாக தாக்கியதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உஷாவை சரமாரியாகக் குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த உஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற கோபாலகிருஷ்ணா, கெத்துலாபுரா கிராமத்திற்கு சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். காதலை தெரிவிக்க தைரியம் இல்லாமல், அந்தப்பெண்ணுடன் வெளியில் நண்பர் போல பழகிய கோபாலகிருஷ்ணாவால் உள்ளுக்குள் மனைவியாக நேசித்த உஷாவை வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுக்க மனமில்லாமல் விபரீத செயலில் ஈடுபட்டதோடு, தானே முடிவையும் தேடிக் கொண்டதாக போலீசார் சுட்டிக்காட்டினர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments