பூர்வீக தமிழராக இருந்தாலும், தான் வசித்த, தன்னை நேசித்த கன்னட மக்களுக்கு உற்றதுணையாக இருந்த புனித்ராஜ்குமாரின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாணவிகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தந்தையின் பெயரில் தனியாக செல்போன் செயலியை உருவாக்கிய உன்னதனின் நிறைவேறாத ஆசைகள் குறித்து விவரிக்கின்றது., இந்த செய்தி தொகுப்பு... ஈரோடு மாவட்டம் கஜனூரை பூர்வீகமாக கொண்ட தமிழரான ராஜ்குமார் கன்னட சினிமாவில் கோலோச்சியதால் பெங்களூருவில் செட்டிலாகி கன்னட மக்களின் நேசத்துகுரியவரானார்.ராஜ்குமாரின் இளைய வாரிசான புனித்ராஜ்குமார் சென்னையில் பிறந்தாலும், தனது குடும்பத்தை அரவணைத்துக் கொண்ட கன்னட மக்களுக்காக தந்தையின் வழியில் பல்வேறு சமூக நலப்பணிகளை முன்னெடுத்து வந்தார். கர்நாடகாவில் பெண்கள் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் பாதியில் விட்டு செல்வதை தவிர்க்கவும், தங்களது கனவுப்படிப்பையோ, விளையாட்டையோ தொடர இயலாமல் தவிக்கும் மாணவ மாணவிகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக, "டாக்டர் ராஜ்குமார் ஆப்" என்ற செல்போன் செயலியை தொடங்கி அதன் மூலம் எண்ணற்ற மாணவ மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் புனித்ராஜ்குமார்... 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ராஜ்குமார் பெயரில் இயங்கி வரும் கண்மருத்துவமனை மூலம் இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ராஜ்குமார் அவரது மனைவி பர்வதம்மாள் ஆகியோரும் தங்கள் கண்களை தானமாக கொடுத்துள்ளனர். அவர்களை தொடர்ந்து அந்த குடும்பத்தில் புனித்ராஜ்குமார் 3ஆவது ஆளாக கண் தானம் செய்துள்ளார். அதன்படி இன்னும் இரு தினங்களில் அவரது கண்கள் இருவரது வாழ்வில் இருளை நீக்கி ஒளி அளிக்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இயற்கை நேசரான புனித்ராஜ்குமார் அடிக்கடி சிக்மகளூர் காட்டுப்பகுதிக்கு டிரெக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்ற தந்தையின் சொல்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்ட புனித்ராஜ்குமார், ஒரு முறை தென் அமெரிக்க சென்றிருந்த போது பாராகிளைடரில் ஏறி, காடுகளுக்கு மேலாகவும், மேகக்கூட்டங்களுக்குள் புகுந்தும் , சிறிதும் அச்சமின்றி பறந்து தன்னுடைய இயற்கை மீதான பேரார்வத்தை வெளிப்படுத்தியவர். கன்னட சினிமாவில் சிறப்பாக நடனமாடக்கூடிய நடிகர்களில் புனித்ராஜ்குமாரும் ஒருவர்... இருப்பினும், அவர் முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக் கொண்டதில்லை... ஆனால் தனது மானசீக குருவாக மைக்கேல் சாக்சனை ஏற்றுக்கொண்டு, அவர் நடனமாடுவதை பார்த்து நடனம் கற்றுக் கொண்டதாக ஒரு முறை ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். தமிழன் என்றாலே பகையாளன் என்ற கண்ணோட்டத்தில் வெறித்து பார்க்கும் கர்நாடகாவில், தமிழரான ராஜ்குமாரையும், அவரது மகன்களான சிவராஜ்குமார், புனித்ராஜ்குமாரையும் தலைமுறை, தலைமுறையாக சூப்பர் ஸ்டாராக கொண்டாடுகின்றனர் என்றால் அங்குள்ள மக்களுக்கு அவர்கள் அந்த அளவுக்கு உண்மையாக இருந்திருக்கின்றனர் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். நடிகராக மட்டுமல்லாமல், பாடகராகவும், தயாரிப்பாளராகவும், விளம்பர தூதுவராகவும் அறியப்பட்ட புனித்ராஜ்குமார் தனது மனித நேயத்தால் கன்னடத்து மக்களை மிகவும் கவர்ந்திழுந்தவர். தான் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் படங்களில் சிறிய கதாபாத்திரம் கிடைத்தால் கூட நடிக்க தயாராக இருப்பதாக, முன்பொரு விழாவில் விருப்பம் தெரிவித்த புனிதராஜ்குமாரின் ஆசை நிறைவேறாத ஆசையாகி போனது. அதே நேரத்தில் தனது சகோதரர் சிவராஜ்குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கும் திட்டத்தில் புனித்ராஜ்குமார் இருந்ததாகவும், அதனை நவம்பர் ஒன்றாம் தேதி அறிவிக்கும் திட்டத்துடன் இருந்ததாகவும், ஆனால் அதற்குள்ளாக யாரும் எதிர்பாராத இந்த சோகம் நிகழ்ந்துவிட்டதாக கூறி புனித்ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் சிலர் கண்ணீர் சிந்தியதை காணமுடிந்தது. தமிழ் நன்றாக பேசத்தெரிந்தாலும் தன்னை நேசிக்கும் கன்னட மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக விருது விழாவில் கூட கன்னடத்தில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தவர் புனித்ராஜ்குமார். அதனால் தான் அவரை தங்களின் குடும்பத்தில் ஒருவராக பாவித்து பல மணி நேரமாக நீண்ட வரிசையில் நின்று அப்பு, அப்பு என்று கண்ணீருடன் கன்னட மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புனித்ராஜ்குமாரின் இறப்பிற்கு பின்னர் தான் அவரது தன்னலமற்ற சேவைகள் உலகிற்கு ஒவ்வொன்றாக பயனடைந்தவர்களால் பறைசாற்றப்பட்டு வருகின்றது. தனது சாவை கூட சரித்திரமாக்கிய கன்னட தமிழன் புனித்ராஜ்குமாருக்கு தமிழர்கள் சார்பிலும் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எந்த பெங்களூரு வீதிகளில் அதிகாலையில் அப்புவின் சைக்கிள் உடற்பயிற்சிக்காக வலம் வந்ததோ, அதே வீதிகள் வழியாக அவரது சடலம் ஞாயிற்றுகிழமை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது. மறைந்த ராஜ்குமார், பர்வதம்மாள் நினைவிடத்திற்கு அருகே புனித்ராஜ்குமாரும் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments