ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் தன்னுடைய அடுத்த லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை இதுவரை இந்தியா வென்றதே இல்லை. இதுமட்டுமல்லாமல் கடந்த சில காலங்களில் ஐசிசி நடத்தியப் போட்டிகளிலும் நியூசிலாந்தை வென்றதில்லை. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் தங்களை வீழ்த்தியதில்லை என்று கெத்தாக களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்து அற்புதமாக விளையாடினர் ரிஸ்வானும், பாபர் அசாமும். அத்துடன் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முடிவுரை எழுதப்பட்டது. இதேபோல நியூசிலாந்தும் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு தோல்வி கண்டது. இதனால் இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் அடுத்தப் போட்டி முக்கியமானதாக இருக்கும்.
டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக இந்த இரு அணிகளும் 2007 இல் மோதியது. அப்போது இந்திய அணிக்கு தோனியும், நியூசிலாந்துக்கு டேனியல் வெட்டோரியும் கேப்டனாக இருந்தனர். அந்தத் தொடரின் சாம்பியனாக இந்தியா இறுதியில் வெற்றி வாகை சூடினாலும், அந்தத் தொடரில் லீக் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 191 ரன்களை குவித்தது. இந்தியா பெரிய இலக்கை சேஸ் செய்ய களமிறங்கியது. காம்பிர் (51), வீரேந்திர சேவாக் (40) ரன்கள் எடுத்தாலும், 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது.
அடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்தது நியூசிலாந்து. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 126 ரன்களை மட்டுமே சேர்த்தது. எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 79 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது. டி20 உலகக் கோப்பையில் மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளில், மிக முக்கியமாக 2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளிலும் கோலி தலைமையிலான இந்திய அணி வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.
இத்தகைய தோல்வி வரலாற்றுடன்தான் தன்னுடைய அடுத்தப் போட்டியில் களம் காண இருக்கிறது இந்திய அணி. துபாயில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் எத்தகைய வியூகங்களுடன் களம் காண இருக்கிறது என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. இரு அணிகளுக்கும் முதல் போட்டியே தோல்வி, அதிலிருந்து சில பாடங்களும் கற்று இருப்பார்கள். அதனை எந்த அணி வெற்றிப் படிகட்டுகளாக மாற்றும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments