ஆசிய நாடுகளில், மர்ம தேசமாக விளங்கும் வடகொரியாவில் வரலாறு காணாத உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. இதையடுத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ``நாட்டில் உணவுப் பஞ்சம் தலை விரித்து ஆடுவதால், 2025 வரை மக்கள் குறைவாக உணவு சாப்பிட வேண்டும்'' என உத்தரவிட்டு அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்.
`வட கொரிய மக்கள்தொகையில் 40 சதவிகிதம் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டு வருகிறார்கள்' என்கிறது ஐ.நா சபையின் புள்ளிவிவரம். இந்த நிலையில், உணவுப் பஞ்சம் தற்போது பன்மடங்கு அதிகரித்திருப்பதால், நாட்டு மக்களின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும், ``ஒவ்வொரு மக்களும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று ஒரு நாட்டின் ஆட்சியாளர் சொல்வது மிக மிகத் தவறு. உணவுக் கட்டுப்பாடு விதித்திருப்பது ஆட்சியாளர்களின் தோல்வியையே காட்டுகிறது'' என்று கண்டனங்களைப் பதிவு செய்துவருகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
உணவுப் பஞ்சம் குறித்து, ``2025 வரை மக்களைக் குறைவாக உணவு எடுத்து கொள்ளச் சொல்கிறது அரசு. இது எப்படிச் சாத்தியமாகும். இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மோசமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். தினசரி உணவுப் பற்றாக்குறையால் கடுமையாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு இந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை?'' எனக் கூறி வட கொரிய மக்கள் தவித்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. உணவுப் பஞ்சம் காரணமாக பல்வேறு உணவுப் பொருள்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. வட கொரியாவில் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை இந்திய மதிப்பில் சுமார் 3,300 ரூபாய்க்கு விற்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 1990-களில் சோவியத் யூனியன் உடைந்தபோது முதன்முறையாக வட கொரியா மிகக் கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்டது. அதற்குப் பிறகு, தற்போது மீண்டும் பசியும் பட்டினியும் அங்கு தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன என்கின்றனர் உலக அரசியலை உற்றுநோக்குபவர்கள்.
Also Read: வட கொரியா: `வரலாறு காணாத பஞ்சம்; அதிகரித்த உயிரிழப்புகள்; அதிகாரிகளைப் பதவிநீக்கிய கிம் ஜாங் உன்!'
என்ன காரணம்?
``கடந்த ஆண்டு, வட கொரியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகள், வெள்ளம் காரணமாக விவசாயப் பொருள்கள் சேதமடைந்தன. பயிர்களும் நாசமடைந்தன. இதன் காரணமாக உணவுப் பொருள்களின் விலை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து உணவுப் பஞ்சமும் அதிகரித்திருக்கிறது'' என்று வட கொரிய வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாது, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகத் தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்குச் சீல் வைத்திருக்கிறது வடகொரியா. பெருமளவு உணவுப் பொருள்களுக்குச் சீனாவையே சார்ந்திருந்த வடகொரியா. அந்த எல்லையும் மூடப்பட்டிருப்பதால் உணவுப் பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இதே வடகொரியா இந்தநிலையில், கடந்த காலங்களில், `எங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை. வைரஸால் யாரும் பாதிப்படையவில்லை’ எனத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிடம் கூறியது என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனாவுடனான எல்லைப் பகுதி, 2025-க்கு முன்னர் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்கிறார்கள் வடகொரிய அரசைச் சேர்ந்தவர்கள். அப்படியிருக்கையில் இந்த உணவுப் பஞ்சத்தை அந்த நாடு எப்படி எதிர் கொள்ளப்போகிறது என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது!
from Latest News
0 Comments