தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதுபோல, கோவிட் சிகிச்சைக்கு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனவா?
- சிவசங்கரி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.
``கோவிட் வைரஸ் தொற்றுக்கு எதிராகச் செயல்படும் ஆன்டிவைரல் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 20,000-க்கும் அதிகமான மருந்துகளைப் பரிசோதித்துப் பார்த்துள்ளார்கள். அவற்றிலிருந்து சுமார் 150 மருந்துகளை மட்டும் எடுத்து அவற்றின் செயல்திறன் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
சிலவகை வைரஸ் தொற்றுக்கான ரெம்டெசிவிர், ஃபேவிபிராவிர் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனாலும் கோவிட் வைரஸ் தொற்றுக்கு எதிராகச் சிறப்பாகச் செயலாற்றக்கூடிய `வைரஸ் எதிர் மருந்து' இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல மருந்துகள் இன்னும் ஆராய்ச்சிநிலையிலேயே உள்ளன. அவற்றில் ஒன்று மோல்னுபிராவிர் (Molnupiravir). இந்த மருந்து, புதிதாக உருவாகும் கோவிட் வைரஸின் ஆர்.என்.ஏ சுருளில் படிந்துவிடும். அதன் காரணமாக இந்த வைரஸ் வளர்ச்சியடையவோ பெருகவோ முடியாமல் போய்விடும். இதன் மூலம் வைரஸ் பெருக்கத்தைக் குறைத்து நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். இந்த மருந்து மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது.
Also Read: Covid Questions: `லாங் கோவிட்' பாதிப்பிலிருந்தும் பாதுகாக்குமா கோவிட் தடுப்பூசி?
பொதுவாக வைரஸ்களுக்கு எதிரான மருந்துகளைக் கண்டுபிடித்து, தயாரித்து வெளிக்கொண்டு வருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டி இந்த மருந்து, சோதனைகள் முடிந்து தயாரிக்கப்பட ஆரம்பித்தால், அதிலும் எளிதில் உட்கொள்ளும் மருந்தாகக் கண்டுபிடிக்கப்பட்டு உபயோகத்துக்கு வந்தால் கோவிட் வந்துவிடுமோ என்ற பயமோ, தடுப்பூசி போட்டுக்கொண்டால் என்ன ஆகுமோ என்ற பயமோ தேவையிருக்காது. கொரோனாவுக்கு குட்பை சொல்லும் அந்த நாளுக்காகத் தான் அனைவரும் வெயிட்டிங்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
from Latest News
0 Comments