Ticker

6/recent/ticker-posts

Ad Code

நள்ளிரவு வரை நீடித்த செவிலியர்கள் போராட்டம்: கைது; வாக்குவாதம்; பேச்சுவார்த்தை..! - நடந்தது என்ன?

கொரோனா இரண்டாம் அலை பரவல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தவுடன், கொரோனா தடுப்புப் பணிக்காக 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதுபோலவே மருத்துவத்துறை சார்பிலும், மாவட்ட அளவிலும் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மூன்று முதல் ஆறு மாதம் ஒப்பந்தத்தில் பணி வழங்கப்பட்டது.

செவிலியர்கள் போராட்டம்

அதுமட்டுமில்லாது முதல் மற்றும் இரண்டாம் அலை சமயத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் செவிலியர்கள் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து விகடனில் ஏற்கனவே விரிவாக எழுதியிருந்தோம். கீழே உள்ள லிங்கில் அந்த கட்டுரையைப் படிக்கலாம்.

Also Read: கொரோனா பணிக்குச் சேர்க்கப்பட்ட செவிலியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

ஏற்கனவே ஆயிரக்கணக்காகச் செவிலியர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் எம்.ஆர்.பி அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட செவிலியர்களை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் அவுட் சோர்சிங் அடிப்படையில் மாற்றம் செய்வதாகக் கூறப்பட்டது. இதனை அடுத்து, `எம்.ஆர்.பி அடிப்படையில் சேர்க்கப்பட்ட செவிலியர்களை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் மாற்றக் கூடாது. கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பணி செய்த எங்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக்கணக்காகச் செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவிலியர்கள் போராட்டத்தில் கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், செவிலியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். செவிலியர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபடச் செவிலியர்கள் சிலர் மயக்கமடைந்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

மாலை ஏழு மணியளவில் போராட்டத்தில் ஈடுபட நான்கு ஆண் செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது. இதனால், செவிலியர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு வரை தொடர்ந்த போராட்டத்தில் செவிலியர்களுடன் காவல்துறையினர் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், வரும் திங்களன்று மருத்துவத்துறை அமைச்சர், மருத்துவத்துறை செயலாளர், அதிகாரிகள் ஆகியோர் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவதக்கவும் தெரிவித்தனர்.

பேருந்தில் ஏற்றி அனுப்பப்படும் செவிலியர்கள்

அதனை தொடர்ந்து போராட்டத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்த செவிலியர்கள், திடீரென மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்னர் காவல்துறையினர் மீண்டும் பேசி போராட்டத்தைக் கைவிட வைத்தனர். கடைசியில் காவல்துறையினர் வாகனங்களை ஏற்பாடு செய்து செவிலியர்களை அனுப்பிவைத்தனர். ஒவ்வொரு பேருந்துகளிலும் 80 முதல் 100 செவிலியர்களை ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட நான்கு ஆண் செவிலியர்களை விடுவிப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Also Read: வேலை செஞ்சாலும் வசைகள் வாங்குறாங்க! - தடுப்பூசி பணியில் கிராமப் புற செவிலியர்கள்

செங்கல்பட்டிலிருந்து வந்து போராட்டத்தில் கலந்துகொண்ட செவிலியர் ஒருவரிடம் பேசியபோது, ``திமுக ஆட்சிக்கு வந்ததும் தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறினார்கள். ஆனால், உண்மையில் நடப்பது வேறு. ஆயிரக்கணக்கான செவிலியர்கள் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது எம்.ஆர்.பி அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட செவிலியர்களையும் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற முடிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களில் பெரும்பாலானோர் மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டிலிருந்தவர்கள் தான்" என்றார்.

போராட்டத்தில் செவிலியர்கள்

மேலும், ``தற்போது எங்களையும் அவரின் கட்டுப்பட்டு மாற்றிப் பணி நீக்கம் செய்யவே இந்த முடிவைச் செய்துள்ளது அரசு. கொரோனா சமயத்தில் எங்களின் உயிரையும் பொருட்படுத்தாது கொரோனா பணி செய்ததற்கு அரசு செய்யும் கைமாறு இது தானா? 14,000 ரூபாய் சம்பளத்தில் தான் வேலை பார்க்கிறோம். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களுக்குப் பணி நிரந்தரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இந்த வேலையும் போய்விடுவோம் என்ற பயத்தில் தான் இருக்கிறோம். எங்களை அரசுப் பணி நிரந்தரம் செய்யவேண்டும் " என்று கவலையுடன் தெரிவித்தார்.



from Latest News

Post a Comment

0 Comments