ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் சுகாதார அட்டை வழங்கப்பட உள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை சிகிச்சையை பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் 40 விழுக்காடு மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும். உலகிலேயே மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 50 கோடி இந்தியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ், ஒவ்வொருவருக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும். மருத்துவ உதவி தேவைப்படுவோர் குறித்த விபரங்கள் இதில் சேகரிக்கப்பட்டிருக்கும். இந்த அட்டையுடன் மருத்துவ ஆவணங்கள் இணைக்கப்படுவதால் அருகில் உள்ள மருத்துவமனை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவி குறித்த தகவல்களைப் பெற முடியும். தற்போது 6 யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம், இன்று நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. காலை 11 மணியளவில் காணொலி மூலம் பிரதமர் மோடி இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments