தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டுக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களைப் புறக்கணித்து, உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்துள்ளதும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களைவிட அதிகமாக இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்ததோடு அதை உடனடியாக திரும்பப்பெறவில்லையென்றால் நேரடிப் போராட்டத்தில் இறங்குவோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய ரயில்வே அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். 2018-இல் ரயில்வே வாரியம் உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர்கள் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரியிருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்குத்தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியிலும் தேர்வு எழுதலாம். ஆனால், எந்த ரயில்வேக்குத் தேர்வு எழுதுகிறார்களோ அந்த ரயில்வேக்குத்தான் அவர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே டெக்னீசியன் பிரிவில் இந்தியில் தேர்வு எழுதிய 60 சதவிகிதம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ரயில்வே துறையில் பணி வாய்ப்புகள் என வந்தாலே எப்போதும் சர்ச்சைக்குள்ளாவது வாடிக்கை ஆகிவிட்டது. எப்போது ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வுகள் வந்தாலும் அதில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக ஒரு பார்வை...
Also Read: ``கோரக்பூர் ரயில்வேயில் தேர்வானவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பதவியா?"- சு.வெங்கடேசன் எம்.பி
2013-ஆம் ஆண்டில் ரயில்வேயின் குரூப் - டி பிரிவு பணியிடங்களுக்குத் தேர்வு நடந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தேர்வு தொடர்பாகவும் விண்ணப்பதாரர்கள் தொடர்பாகவும் தங்களிடம் உள்ள தகவல்கள் குறித்து ரயில்வே அளித்த விளக்கத்தை ஏற்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா “ரயில்வே தேர்வில் தென்னிந்தியர்கள் புறக்கணிக்கப்படவில்லை” எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார். 2017-ம் ஆண்டு ரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில், தொழில்நுட்ப பணியாளர்களாக 581 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். இதில் 12 இடங்கள் மட்டுமே தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 569 இடங்களுக்குப் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாகப் பீகார், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் தேர்வு செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணியிடங்களில் 90 சதவிகிதம் தமிழர்களைக் கொண்டும், தமிழகத்தில் உள்ள மாநில அரசுப் பணியிடங்களை 100 சதவிகிதம் தமிழர்களைக் கொண்டும் நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்தன.
ஆனால்,``தமிழ்நாட்டைச் சேர்ந்த வெறும் 40 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டனர். விண்ணப்பித்தவர்களில் பலர் அதற்குரிய கல்வித்தகுதியைப் பெற்றிருக்கவில்லை” என விளக்கமளித்தது.
2018-ம் ஆண்டில் நடைபெற்ற மற்றொரு தேர்வில் தென்னக ரயில்வேயில் காலியாக இருந்த 2,979 இடங்கள் உட்பட இந்தியா முழுவதும் காலியாக இருந்த 62,918 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களைக் கோரியிருந்தது மத்திய ரயில்வே அமைச்சகம். ஒட்டுமொத்தப் பணியிடங்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு கோடியே 85 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தென்னக ரயில்வேயில் இருந்த காலிப்பணியிடங்களுக்குக் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலிருந்து 8,941 பேர் உடற்தகுதித் தேர்வுக்காகத் தேர்வாயினர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியிருக்கிறார்கள். தமிழக ரயில்வே வேலைகளுக்காகப் பிரத்யேகமாக நடைபெற்ற இந்தத் தேர்வில் தமிழகத்தைப் பற்றிய கேள்விகளே அதிகம் இருக்கும். அப்படியிருக்கும் போது வடமாநிலத்தவர்கள் தமிழர்களை விட அதிகம் தேர்ச்சி பெற முடியும் என்பதோடு சிலர் 100 மதிப்பெண்களுக்கு 120, 354 மதிப்பெண்கள் எனப் பெற்றிருப்பதாக வெளியான தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
“நார்மலிசேசன் முறைப்படி மதிப்பெண் கணக்கிடப்படுவதால் மதிப்பெண்கள் இவ்வாறு வந்துள்ளன, அதை முறைகேடாகக் கருத வேண்டாம். தேர்வுகள் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு வினாத்தாள்களைக் கொண்டு நடைபெற்றது. கடினமான மற்றும் எளிதான வினாத்தாள்களிடையே உள்ள வேறுபாட்டை நீக்க நார்மலிசேசன் என்ற முறை கடைப்பிடிக்கப்படுகிறது. 19 வருடங்களாக இதேமுறையைத் தான் பின்பற்றப்படுகிறது” என ரயில்வே விளக்கம் அளித்தது.
Also Read: ரயில்வேதுறையில் தமிழருக்கே வேலை... தென்னக ரயில்வே கூட்டத்தில் குரல்கொடுத்த தமிழக எம்.பி-க்கள்!
தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில்களின் பாதுகாவலர் பதவி உயர்வுக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. 96 இடங்களுக்கு நடந்த தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவாயிரம் பேர் உட்பட ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். அதையடுத்து தென்னக ரயில்வேயில் பிட்டர், மெக்கானிக் உள்ளிட்ட 1,765 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. அந்தத் தேர்விலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 1,600 பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். தேர்வு முறையில் மட்டுமல்ல தேர்வு எழுதவும் இந்தி, ஆங்கிலம் மட்டுமே என்றிருந்திருக்கிறது. சில நேரங்களில் தமிழ் தவிர இன்ன பிற மொழிகளில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இவையெல்லாவற்றையும் போராட்டங்கள் மூலமே தமிழ்நாடு கடந்து வந்திருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசுப் பணிகளில் புறக்கணிக்கப்படுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
ரயில்வே துறையில் மட்டுமல்ல, என்.எல்.சி., பாரத மிகுமின் நிறுவனம், அஞ்சல்துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் சுங்கத்துறை போன்ற துறைகளிலும் தமிழகத்தில் வேலை செய்வதற்கு ஆள் எடுப்பதில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாகப் புகார்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மத்திய அரசு வேலைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இதுபோன்ற சர்ச்சைகள் இனியும் வராமல் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
from Latest News
0 Comments