Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஜெர்மனி தேர்தல்: பதவி விலகும் ஏஞ்சலா மெர்க்கல்; 16 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்; பின்னணி என்ன?

ஜெர்மனியில் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 26) அன்று, ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றன. அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை (செப். 27) அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்தத் தேர்தலில், 2005-ம் ஆண்டிலிருந்து ஜெர்மனியை ஆட்சி செய்த ஏஞ்சலா மெர்க்கலின் கிறஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மெர்க்கல் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சிக்கு அதிக வாக்குகளும், இடங்களும் கிடைத்திருக்கின்றன.

பெரும்பான்மை இல்லை!

ஜெர்மனி நடாளுமன்றத்தில் மொத்தம் 735 இடங்கள் இருக்கின்றன. இதில் 368 இடங்களைக் கைப்பற்றும் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும். ஏஞ்சலா மெர்க்கலின் கிறஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன் கட்சிக்கு 24.1 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அந்தக் கட்சி 196 இடங்களைப் பெற்றிருக்கிறது. 206 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சிக்கு, 25.7 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இந்தத் தேர்தலை பொறுத்தவரை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஜெர்மனி

Also Read: `ட்ரம்ப் ஆட்சியில் ஹீரோ; பைடன் ஆட்சியில்?' - மோடியின் அமெரிக்க டைரிக் குறிப்புகள் சொல்வது என்ன?

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜெர்மனி நாடாளுமன்றத்தில், கிறஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன் கட்சியும், சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சியும்தான் ஆதிக்கம் செலுத்திவந்தன. ஆனால், சுற்றுச்சூழல் பிரச்னைகள் சார்ந்து அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தத் தேர்தலில், க்ரீன்ஸ் கட்சியும், லிபரல் கட்சியும் இளைஞர்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன. அதன்மூலம் இவ்விரு கட்சிகளும் அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன. க்ரீன்ஸ் கட்சிக்கு 118 இடங்களும், லிபரல் கட்சிக்கு 92 இடங்களும் கிடைத்திருக்கின்றன.

எந்தக் கட்சி ஆட்சியமைக்கும்?

இந்தத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லையென்றாலும், கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சி இறங்கியிருக்கிறது. இதுகுறித்து அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஓலஃப் ஷோட்ஸ், ``கிறஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன், எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர வேண்டும் என மக்கள் விரும்பியிருக்கிறார்கள். அதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நாங்கள் லிபரல், க்ரீன்ஸ் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஆட்சியமைப்போம். ஜெர்மனியில் சிறப்பான அரசை உருவாக்க மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்'' என்று கூறியிருக்கிறார்.

பல விஷயங்களில் எதிரெதிர் கருத்துகளைக் கொண்டு மோதிக் கொள்ளும் க்ரீன்ஸ் கட்சியையும், லிபரல் கட்சியையும் ஒரே கூட்டணியின் கீழ் கொண்டுவருவது கடினம் எனச் சொல்லப்படுகிறது. அதனால், கூட்டணி குறித்து முடிவுகள் எட்டப்பட டிசம்பர் மாதம் வரைகூட ஆகலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

ஓலஃப் ஷோட்ஸ்

ஓலஃப் ஷோட்ஸ், `கூட்டணி அமைத்து ஆட்சியமைப்போம்' எனத் தெரிவித்திருக்கும் கருத்துகளை ஏற்க மறுத்த கிறஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன் கட்சி, ``அதிக இடங்களைப் பிடித்த கட்சி, ஆட்சியமைக்க அதிகாரம் கொண்டது என அர்த்தமில்லை. எங்கள் கட்சி ஆட்சியில் அமர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். நவீன ஜெர்மனியை உருவாக்கக் கூட்டணி ஆட்சி தேவைப்படுகிறது'' என்றிருக்கிறது. இதன்மூலம், கிறஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன் கட்சி, சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சி என இரு கட்சிகளுமே கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கான முடிவிலிருப்பது தெரியவருகிறது. ஆனால், சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சி ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகளே அதிகமிருக்கிறது என்கிறார்கள் ஜெர்மனி அரசியலை உற்று நோக்குபவர்கள்.

ஜெர்மனியில் தற்போதைய நிலவரப்படி, மூன்று கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் சூழலே இருந்துவருகிறது. அப்படி ஆட்சியமைத்தால், ஜெர்மனி அரசியல் வரலாற்றில் மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பது இதுவே முதல்முறையாக இருக்கும்.

மெர்க்கல் கட்சி சறுக்கியது ஏன்?

கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து பிரதமராக இருக்கும் ஏஞ்சலா மெர்க்கல்தான், ஜெர்மனியின் முதல் பெண் பிரதமர். உலக நாடுகளிடையே செல்வாக்கு மிக்க பெண் அரசியல் தலைவராக விளங்கும் மெர்க்கல், ஐரோப்பா ஒன்றியத்தின் சக்திவாய்ந்த தலைவராகவும் இருந்துவருகிறார். அப்படியிருந்தும் அவரது கட்சி ஏன் இந்தத் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்கிற கேள்வி எழுகிறது.

அதற்குப் பதில் தரும் வகையில் சில தகவல்களைச் சொல்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள், ``1949 முதல் ஜெர்மனி அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த கிறஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியனுக்கு இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியைத் தந்திருக்கிறார்கள் ஜெர்மன் மக்கள். 2018-ம் ஆண்டு கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த மெர்க்கல், 2021 தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அறிவித்தார். ஜெர்மனி அரசியலில் இரும்புப் பெண்மணியாக வலம்வந்த மெர்க்கல் அரசியலிலிருந்து ஓய்வுபெற்றிருப்பதே அக்கட்சிக்கு பின்னடைவுதான். 1990 முதல் ஏஞ்சலா மெர்க்கல் போட்டியிட்டு வென்ற தொகுதியில்கூட, இந்த முறை சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சியே வெற்றிபெற்றிருக்கிறது.

ஏஞ்சலா மெர்க்கல்

Also Read: புதிரான புதின்; `தில்' வெற்றியா, `தில்லு முல்லு' வெற்றியா? - ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் சம்பவங்கள்!

ஏஞ்சலா மெர்க்கலின் ஓய்வுதான் கிறஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியனின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஜெர்மனியிலிருக்கும் இளைஞர்கள் பலரும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்கள் நாட்டுக்குத் தேவை என்று நினைக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் சூழலியல் தொடர்பான திட்டங்களை அடுக்கிய க்ரீன்ஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் நீண்ட காலமாக ஆட்சியிலிருக்கும் மெர்க்கலின் கட்சி, நவீன உள்கட்டமைப்புகளை அமைக்கத் தவறிவிட்டதாகவும், சரியான முதலீட்டாளர்களை ஜெர்மனிக்குக் கொண்டுவரத் தவறிவிட்டதாகவும் ஜெர்மன் மக்கள் கருதுகின்றனர். ஐரோப்பா ஒன்றியத்தின் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கு வலதுசாரி ஆட்சியாளர்கள் சரியான தீர்வு காணவில்லை என ஜெர்மன் மக்கள் கருதுகின்றனர். அதன் காரணமாகத்தான் இடதுசாரிகளான சோஷியல் டெமாக்ரட்டிக், க்ரீன்ஸ் ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர்'' என்கிறார்கள்.



from Latest News

Post a Comment

0 Comments