உலகளவில் ஆசிய யானைகளுக்கு புகலிடமாக இந்தியா இருக்கிறது என்றால் அது மிகையல்ல. உலகின் 50 சதவித யானைகள் எண்ணிக்கை இந்தியாவில்தான் இருக்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 27,300 யானைகள் காடுகளில் வசிக்கிறது. இந்தியாவில் யானைகள் எண்ணிக்கை எப்படி அதிகமோ, அதே நேரத்தில் அவற்றுக்கு ஆபத்துகளும் அதிகம் இருக்கிறது. மிக முக்கியமாக மின்வேலிகளால் யானைகளுக்கு ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை தரும் விஷயமாக மாறி வருகிறது. மின்வேலிகள் யானைகளின் உயிரை பறிக்கும் மிருகமாகி உருமாறி வருகிறது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிவித்த கணக்கின்படி 2014 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 474 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன. இதில் அசாம் மாநிலத்தில் 90 யானைகளும், ஓடிஷா மாநிலத்தில் 73 யானைகளும், தமிழ்நாட்டில் 68 யானைகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன. மேலும் கர்நாடகா 65, கேரளா 24 யானைகளும் பரிதாபமாக மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. மிக முக்கியமாக யானைகள் விவசாய நிலங்களை கடக்கும்போது அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மின்வேலிகள் காரணமாகவே உயிரிழந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்திய அளவில் ஆண்டுக்கு 80 யானைகள் மின்வேலி பாதிப்பால் உயிரிழப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம்
தமிழக வனப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 1700 யானைகள் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளன. இதுதவிர, தமிழகத்தில் 2014 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் 90 யானைகள் மின்வேலியில் இருந்து வெளிப்படும் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளன. மேலும் வனப் பகுதிகளில் தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதைவிட மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதுதான் அதிகமாக உள்ளது என்ற புள்ளி விவரம் வேதனையளிக்கின்றது. முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார் ஆக்கிரமித்துள்ள எஸ்டேட்டுகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள் காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.
மின்வேலிகளை எப்படி அமைக்க வேண்டும்?
விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம் என்பது வனத்துறை வகுத்துள்ள விதி. அனுமதிக்கப்பட்டுள்ள அளவிலான மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன
விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும். ஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதலான வாட்ஸில் மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதுவே யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்க காரணமாகின்றன.
சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள்
விளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுப்பதற்கு மின்வேலிகளில் பேட்டரி மூலமே அவற்றுக்கு மின்சாரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மின்வேலியிலும் பாய்ச்சுகின்றனர். இதனால், யானைகள் உள்ளிட்ட இதர வன விலங்குகள்
மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன.
இது குறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது "அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்ச்சுவோரை கண்காணிக்கப்பட வேண்டும். மின்சாரம் பாய்ந்து வனவிலங்குகள் உயிரிழந்தாலும், தவறு செய்தோரை தண்டிக்க முறையான ஆதாரங்களை வனத் துறையினரால் சமர்ப்பிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கின்றது. இதனால், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். எனவே, விரைவில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும்" என்றார்.
மேலும் "யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய உயிரினங்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால்தான் இந்த விஷயம் வெளியே தெரிகிறது. சிறிய வகை வன விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன என்பது வெளியே தெரியவில்லை. காட்டின் பசுமை மாறா சூழ்நிலை தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், பல்லுயிர்பெருக்கம் மிகவும் அவசியமானது. காட்டில் வாழும் விலங்கினங்களில் சிறியது பெரியது என ஏதுமில்லை, அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு அரசின் நடவடிக்கை முக்கியம்" என்றார் அவர்.
இது குறித்து கேரளாவைச் சேர்ந்த சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஆசிய யானைகள் வல்லுநர் குழு உறுப்பினரான டாக்டர் ஈ.கே.ஈஸ்வரன் கூறும்போது "யானைகள் மனிதன் இடையிலான மோதலை வெகு சிலர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமே பெரிய விஷயமாக கருதுகின்றனர். ஆனால்
உண்மையில் வனத்துறையில் இதில் அக்கறை கொண்டுள்ளதா எனத் தெரியவில்லை. இப்போதுள்ள சுழல்நிலையில் மின்வேலிகளை அமைக்கும் கிராம மக்களுக்கு நாம் சூழலியல் குறித்த அறிவை ஏற்படுத்த வேண்டும். வன உயிரினங்கள் குறித்த முக்கியத்துவங்களை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கென பிரத்யேகமான ஒரு வழி முறையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக தீர்வு கிடைக்கும்" என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments