Ticker

6/recent/ticker-posts

Ad Code

``அகதிகள் முகாம் அல்ல மறுவாழ்வு முகாம்" - முதல்வர் ஸ்டாலின்- சட்டசபை ஹைலைட்ஸ்!

தமிழக அரசின் நிதிநிலை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து 14-ம் தேதி முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபையில் முதலவர் மு.க ஸ்டாலின்

நிதிநிலைக் கூட்டத்தொடரின் 12-வது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. நேற்றைய தினம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பால்வளத் துறை ஆகிய மூன்று துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றன. நேற்றைய சட்டசபைக் கூட்டத்தொடரில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைக் காணலாம்.

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ``மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இதனை முன்மொழிந்து முதல்வர் பேசியபோது, ``மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டங்கள் கொண்டுவந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாக இல்லை. வேளாண்மையை அழிப்பதாக உள்ளது என்று வேளாண் பெருங்குடி மக்கள் தெரிவிக்கிறார்கள். அதற்காகக் கடந்தாண்டு முதல் போராட்டங்களும் நடத்திவருகிறார்கள். சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு எழுச்சிமிகு போராட்டம் நடந்தது இல்லை. மக்களாட்சி காலத்தில் மக்களின் குரலுக்கு அளிக்கும் மரியாதை இதுதானா என்ற கேள்வி எழுகிறது"

மேலும், ``இதுபோன்ற ஒரு சூழலில் ஒன்றிய அரசு கொண்டுவந்த இந்த வேளாண் சட்டங்களை முழுமையாக எதிர்க்கும் கடமை நமக்கு உள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை நமது நாட்டில் நாம் வைத்துள்ளோம். இதனை சிதைக்கும் நோக்கத்தோடு இந்தச் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறைக்கு எந்த மாநில அரசோடும் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக ஒரு சட்டம் கொண்டுவந்துள்ளது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. அதனால்தான் அந்த சட்டங்களை நிராகரிக்கவேண்டிய நிலை உள்ளது" என்று பேசினார். ``இன்று முதல் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் என்று கூறாமல், இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும். அவர்கள் அனாதைகள் கிடையாது. அவர்களுக்குத் துணையாக நாம் இருக்கிறோம். அந்த உணர்வோடு அகதிகள் முகாம் என்று அழைக்காமல், மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படுமென அரசு ஆணையிட்டுள்ளது" என்று முதல்வர் கூறினார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனி தீர்மானத்தைக் கொண்டுவந்த பிறகு, பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசினார், ``மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறவேண்டும் என்று நமது தமிழக முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக கட்சி வெளிநடப்பு செய்கிறது" என்று கூறினார். அதற்குச் சபாநாயகர் அப்பாவு ``சரி போய்ட்டு வாங்க" என்று வெளியேற அனுமதி வழங்கினார். பாஜக வெளிநடப்பு செய்கிறது என்று கூறும்போது முதல்வர் ஸ்டாலின் வயிறு குலுங்கச் சிரித்துக்கொண்டிருந்தார்.

சட்டசபையில் முதலவர் மு.க ஸ்டாலின்

அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ்., ``முதல்வர் இந்த விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும். அவசரமாக எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும்" என்று கூறினார். பின்னர் அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மீண்டும் சட்டப்பேரவையில் வந்த அவர் பேசுகையில், ``அவரின் நிலைமை குறித்துப் பேசுகையில். ``நதியினில் வெள்ளம். கரையினில் நெருப்பு. இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு. இதுதான் என்னுடைய தற்போதைய நிலை" என்று பேசியிருந்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் பேசுகையில், ``திமுக மக்களுக்காகக் குரல் கொடுக்கும் மாபெரும் மக்கள் இயக்கம். மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராக இருக்கும் என்பதை முதல்வர் மிகவும் ரத்தின சுருக்கமாகக் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்தார். அப்போது எழுந்து பேசிய முதல்வர். ``தமிழ்நாடு முழுவதும் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறவேண்டும் என்று அறவழியில் போராடிய விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்படும்" என்று அறிவித்தார்.

சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன்

திருவாடானைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் பேசுகையில், ``ஏரிகளில் உள்ள கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார். அப்போது எழுத்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``பசுமை காடுகள் அமைக்கவேண்டும் என்று ஒரு காலத்தில் ஏரிகளில் கருவேலமரங்கள் நடப்பட்டன. அந்தத் திட்டம் கொண்டுவந்த நேரத்திலேயே அதைக் கடுமையாக எதிர்த்தவன் நான். ஆனால், அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவிட்டது. இப்போது அதன் விளைவு பயிருக்குப் பாய்ச்சும் நீரை கருவேலமரங்கள் உறிஞ்சிவிடுகிறது. எனது துறையைப் பொறுத்தவரை நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். இருக்கும் கருவேலமரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றியாக வேண்டும். அதை ஒரு திட்டமாகவே செய்யலாம் என்று கருதிக்கொண்டிருக்கிறேன். அந்தந்த பஞ்சாயத்துகள் மரங்களை அகற்றி அந்த காசை எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. எங்களுக்கு அந்த மரங்களை அகற்றினால்போதும்." என்று பேசினார்.

``இன்று முதல் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் என்று கூறாமல், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும். அவர்கள் அனாதைகள் கிடையாது. அவர்களுக்கு துணையாக நாம் இருக்கிறோம். அந்த உணர்வோடு அகதிகள் முகாம் என்று அழைக்காமல், மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என்று அரசு அணையிடப்பட்டுள்ளது" என்று முதலவர் பேசினார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்கக்குறிப்பை அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். ``தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச்செய்து தற்போதுள்ள நிகர சாகுபடி பரப்பான 60 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாக உயர்த்தப்படும். அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் 10 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு உள்ள இரு போக சாகுபடி நிலங்கள், 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும். தேங்காய், பருத்தி, சூரிய காந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம் பிடிக்கும்" என்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மேலும், ``சிவகங்கை, கரூர், நாகப்பட்டினத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு வேளாண் கல்லூரிகள் அமைக்கப்படும். முதல்வரின் அனுமதியோடு 'விவசாயிகளுடன் ஒரு நாள்' என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அவர்கள் தொகுதியில் ஒருநாள் விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்டுத் தீர்வுகாண வேண்டும். 100 சதவிகித மானியத்தில் ஆதிதிராவிட பழங்குடியின ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின்மோட்டாருடன் நுண்ணீர்ப்பாசன வசதி ஏற்படுத்தித் தரப்படும்" போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்கக்குறிப்பை அந்த துறையின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். ``சென்னை கொளத்தூரில் 50 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் வண்ணமீன் வர்த்தக மையம் அமைக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் மூன்று கோடி ரூபாய் செலவில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். ஐந்து கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி துறைமுகம் தூர்வாரி ஆழப்படுத்திச் சீரமைக்கப்படும். பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 2,000 வெளி மற்றும் உட்பொருத்தும் இயந்திரங்கள் 9.60 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்" என்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

Also Read: `அம்மா உணவகம்; புதிய கல்லூரிகள்; `கவிமணி' விருது' - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

மேலும், ``நாட்டுக்கோழி உற்பத்தியை அதிகரிக்க, நெல்லையில் நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை ஏற்படுத்தப்படும். திருச்சி மற்றும் தர்மபுரியில் கருப்பு, செம்மறி ஆடு ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும். கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு 75 கோடி செலவில், ஐந்து செம்மறியாடு/வெள்ளாடு வழங்கப்படும். அரியலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக்கு 3.46 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும்." என்ற அறிவிப்பு உள்ளிட்ட 20-க்கும் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், கடந்த ஆட்சியில் விலையில்லா பசு மற்றும் ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறினார்.

Also Read: `` உதயநிதியைப் புகழ்ந்த எ.வ.வேலு முதல் கட்டளையிட்ட முதல்வர் ஸ்டாலின் வரை" - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்கக்குறிப்பை அந்த துறையின் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் இன்று தாக்கல் செய்தார். ``தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியில் நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்தித் திறனில் 25 கோடி ரூபாய் செலவில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். சேலம் பால்பண்ணையில் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் அளவில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரம் 8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். முதல் முறையாக உறுப்பினர்களுக்குக் கால்நடை பராமரிப்பு குறித்து குரல் ஒலி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக இலவச சேவை அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்

தொடர்ந்து பேசியவர், ``ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை முறையில் சீர்திருத்தம் மற்றும் விற்பனை விரிவாக்கம் செய்து அதிக லாபத்தை ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 60 தானியங்கி பால் கறக்கும் கருவிகள் வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்துக்கு ரூ. 36 லட்சம் மதிப்பில் வழங்கப்படும். பாலின் தரத்தை மேம்படுத்த, பால் குளிர்விக்கும் 40 இயந்திரங்கள் 60 லட்சம் மதிப்பில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு வழங்கப்படும். கால்நடைகளுக்கு இலவச மற்றும் அவசர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த 162 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் 6.80 கோடி ரூபாய் மதிப்பில் அமல்படுத்தப்படும்" போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.



from Latest News

Post a Comment

0 Comments