சேலம் பழைய பேருந்து நிலையத்தில் தாயுடன் நின்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் தாயுடன் நின்றிருந்த பெண் மீது மர்ம ஆசாமி ஒருவர் ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடினார். இதில் அந்தப்பெண்ணின் முகம் மற்றும் மார்பு பகுதி வெந்து கருகியது. இதனால் வலி தாங்காமல் அலறித்துடித்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில் ஆசிட் வீசியவர் சேலம் குகை பகுதியை சேர்ந்த இயேசுதாஸ் என்பதும், அதில் சிக்கி உடல் வெந்து கருகியவர்அவரது மனைவி ரேவதி என்பதும் தெரியவந்தது. இருவருக்கும் கடந்த 20 வருடத்துக்கு முன் திருமணம் ஆன நிலையில் மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் யேசுதாஸ் மனைவி ரேவதி நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.இதனால் சில மாதங்களுக்கு முன்பு ரேவதி கோபித்துக் கொண்டு நாமக்கல்லில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சேலத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவரை தனது தாயுடன் சென்று சந்தித்த ரேவதி டவுனில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் கொடுமை செய்வதாக புகார் கொடுத்தார். பின்னர் ரேவதியும் அவரது தாயாரும் மாலையில் பழைய பேருந்து நிலையத்திற்குள் நடந்து சென்றபோது பின் தொடர்ந்த ரேவதியின் கணவன் இயேசுதாஸ் ஆசிட் பாட்டிலை திறந்து மனைவி ரேவதி மீது ஆசிட்டை வீசி விட்டு தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆசிட் வீசப்பட்டதால் ரேவதியின் தயாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது பட்டபகலில் பலர் முன்னிலையில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா தப்பி ஓடிய இயேசுதாசை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். உதவி கமிஷனர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் சம்பங்கி, காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் இயேசுதாசை தீவிரமாக தேடி வருகின்றனர். கணவன் மனைவிக்குள் பேசி தீர்க்க இயலாத அளவிற்கு கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டால் நீதிமன்றத்தை நாடி முறைப்படி சுமூகமாக பிரிந்து செல்வதை விடுத்து ஒருவருக்கொருவர் வன்மத்துடன் தாக்கிக் கொள்வது பிரச்சனைக்கு தீர்வாகாது என்று சுட்டிக்காட்டும் போலீசார் புதிய வம்பு வழக்குகளில் சிக்கவைத்து வாழ்க்கையை சீரழித்து விடும் என்று எச்சரிக்கின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments