நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நள்ளிரவு முதலே களை கட்டியுள்ளது. வைணவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. கம்சன் தன்னைக் கொல்ல சகோதரியின் வயிற்றில் பிறக்கும் குழந்தை தான் காரணமாக இருக்கும் என்ற சோதிடன் சொல்கேட்டு 8 குழந்தைகளைக் கொன்றதுடன் தங்கையை சிறையிலும் அடைத்து வைத்தான். 9ஆவது குழந்தையாக அவதரித்த கண்ணன் கம்சனைக் கொன்றதுடன், தனது லீலைகளால் விளையாட்டுப் பிள்ளையாக வளர்ந்தான். மதுரா சிறை வளாகத்தில் கண்ணன் பிறந்ததை இன்றும் மக்கள் ஆனந்தமாக ஆடிப்பாடி கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் வீட்டினை சுத்தம் செய்து மலர்களினால் அலங்கரித்து, கோலமிட்டு, இனிப்பு, காரம் வைத்து கையில் வெண்ணெயுடன் தவழும் குழந்தை கண்ணனுடைய படத்தை வைத்து அலங்கரித்து,வாசல் முதல் பூஜை அறை வரை அரிசி மாவுக்கோலமிட்டு சிறுசிறு பாதங்கள் வரைவார்கள். கிருஷ்ண ஜெயந்தியின் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கத்தில் திருச்சியில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. பேதைப் பருவத்தில் இருக்கும் கிருஷ்ணரை மங்கைகள் கொஞ்சுவது போல் நடித்து காட்டி,கண்ணன் ராதை வேடமணிந்து குழந்தைகள் பாட்டு பாடி,நடனமாடி கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர். கண்ணனுடன் தொடர்புடைய ஆண்டாள் மற்றும் மீராவின் காதல் உலகிற்கு மகத்தான காவியமாகவும் விளங்குகிறது. மகாபாரதத்தில் பாஞ்சாலி மானம் காக்க ஆடை அளித்த கண்ணன் , உலகிற்கு பகவத் கீதையை அளித்த ஞானத் தந்தையாகவும் விளங்கினான்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments