Ticker

6/recent/ticker-posts

Ad Code

கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த சிறுவன்; 24 மணிநேரப் போராட்டம்! -நண்பருடன் சென்றபோது விபரீதம்

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டை அடுத்த விநாயகபுரம் பகுதியில் வசித்து வருபவர் முரளிதரன் (53). சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரனேஷ் (16), திருநின்றவூர் அருகே தனியார்ப் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறுவன் பிரனேஷ் நேற்று மாலை தனது பள்ளி நண்பனின் வீட்டிற்குச் சென்று விட்டு வருவதாகக் கூறி விட்டு வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். வேல்சரவணன் என்ற சிறுவனின் வீட்டிற்குச் சென்ற பிரனேஷ், அவரை அழைத்துக் கொண்டு திருவள்ளூர் அடுத்த தொட்டிகளை கிராமத்தில், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் செல்லும் கிருஷ்ணா கால்வாய் பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

கிருஷ்ணா கால்வாயைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சிறுவன் பிரனேஷ் திடீரென கால் தவறி கால்வாயில் விழுந்துள்ளார். நீச்சல் தெரியாத நிலையில், பிரனேஷ் கால்வாயில் பாய்ந்து சென்ற நீரில் தத்தளித்துக் கூச்சலிட்டபடி அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அதைக் கண்டு உடனிருந்த சிறுவன் வேல்சரவணன் அதிர்ச்சியில் நீச்சல் தெரியாததால் செய்வதறியாது அருகிலிருந்தவர்களைக் கத்தி கூச்சலிட்டு உதவிக்கு அழைத்திருக்கிறார்.

அதையடுத்து, அங்கு விரைந்த இளைஞர்கள் சிலர் சிறுவன் பிரனேஷை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கால்வாயில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் சிறுவன் பிரனேஷ் மூச்சு திணறி நீரில் மூழ்கி வேகமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த செவ்வாய்பேட்டை போலீஸார், உடனடியாக திருவூர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் கிருஷ்ணா கால்வாயில் மிதவை படகுகள் மூலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர். ஆனால், பல மணி நேரமாகத் தேடியும் கிடைக்காததால் சிறுவனின் பெற்றோர் கிருஷ்ணா கால்வாய் பகுதியில் கதறி அழுதபடி காத்துக்கிடந்தனர். அதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்த தீயணைத்துறையினர், தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணா கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்!

இந்நிலையில், நேற்றுமுந்தினம் மாலை அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் பிரனேஷை தீயணைப்புத்துறையினர் 24 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நேற்று மாலை சடலமாக மீட்டனர். அவர்களிடமிருந்து உடலைக் கைப்பற்றிய செவ்வாய்பேட்டை போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து சிறுவனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிச் சிறுவன் கிருஷ்ணா கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



from Latest News

Post a Comment

0 Comments