வியாழக்கிழமைகளை 'குருவாரம்' என்று அழைக்கிறோம். கிழமை என்றால் உரிமை. தேவ குருவான வியாழ பகவானுக்கு உரிமையானது இந்தக் கிழமை. இந்த நாளில் மகான்கள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.
பொதுவாக நமக்கு ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொடுப்பவரே 'குரு' என்று நினைக்கிறோம். ஆனால் அப்படியல்ல. இந்த உலகின் குருவான தட்சிணாமூர்த்தி முன்பாக அவர் சீடர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பேச்சில்லை. உடையாடல் இல்லை. ஆனால் அங்கே ஞான உபதேசம் நடக்கிறது.
நமக்கு அனைத்தையும் கற்றுக்கொடுப்பவர் ஆசிரியர். ஞானத்தை உபதேசிப்பவர் குரு. ‘கு’ என்றால் குற்றம் ‘ரு’ என்றால் அழிப்பவர் என்று பொருள். நம் குற்றங்களை எல்லாம் அழித்து நம்மைத் தகுதிப்படுத்துபவர் என்று பொருள். குரு என்பவர் சகலவிதமான ஆசீர்வாதங்களும் வழங்கி நம்மைப் பரப்பிரம்மத்தை அணுகத் தயார் படுத்துபவர். அதனால்தான் முருகப்பெருமானையே ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்று வேண்டினார் அருணகிரிநாதர்.
குரு பக்தி மட்டுமே ஒருவரை உயர்த்தப் போதுமானது. குரு ஒருவர் இருக்கும்போது அவரை வழிபடுவது இறைவழிபாட்டுக்கு நிகரானது. ஒரு கதை உண்டு.
குரு ஒருவர் அக்கறையில் இருந்தார். சீடர் இக்கறையில் இருக்கிறார். குரு அவசரமாக அழைத்தார். உடனே சீடன் எந்த யோசனையும் இன்றி குருவின் நாமத்தைச் சொல்லிக்கொண்டு ஓடோடிவந்துவிட்டார். அதைக் கண்டு குரு திகைத்துப்போனார்.
காரணம் சீடன் அவசரத்தில் நீரில் நடத்து வந்துவிட்டார். குரு கேட்டார். எப்படி நீரில் நடந்துவந்தாய் என்று கேட்டார். அதற்கு அந்த சீடன், ‘உங்கள் நாமத்தைச் சொல்லிக்கொண்டே ஓடிவந்தேன்’ என்றார்.
ஒரு கணம் அந்த குருவுக்குப் பெருமையாய் இருந்தது.
‘தன் பெயருக்கு இவ்வளவு மகிமையா...’ என்று யோசித்தார். உடனே அதைப் பரிசோதனை செய்யத் தன் பெயரைச் சொல்லிக்கொண்டே நதியில் இறங்கினார். அடுத்த கணம் நீரில் மூழ்கத் தொடங்கினார். சீடன் ஓடிவந்து காப்பாற்றினார்.
உண்மையில் சீடனை அற்புதம் செய்ய வைத்தது வெறும் பெயர் அல்ல. குருபக்தியும் அது தரும் நம்பிக்கை. அந்த அற்புதம் குருவுக்கும் நடந்திருக்கலாம், ஒருவேளை அவர் அவரின் குருவின் பெயரைச் சொல்லி முயன்றிருந்தால்.
நம் அனைவருக்குமே ஞானத்தில் வழிநடத்தும் குரு ஒருவர் தேவை. அதற்காக இந்த நாளில் குரு வழிபாடு செய்வோம். தங்களின் ஞான குருக்களைக் கண்டடையாதவர்கள், ‘தமக்கு அந்த பாக்கியம் சீக்கிரம் வாய்க்க வேண்டும்’ என்று லோக குருவான தட்சிணாமூர்த்தியிடம் இந்த நாளில் வேண்டிக்கொள்வோம்.
from Latest News
0 Comments