சென்னையில் அதிகாலையில் சைக்கிளிங் சென்ற பள்ளி மாணவனை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் துரத்தி வந்து கத்தியால் குத்தி வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்த் நந்தகுமாரின் மகன் ரித்தீஷ் சாய். கோடம்பாக்கத்தில் உள்ள அஞ்சுகம் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். 18 வயதிற்குட்பட்ட வாலிபால் அணியில் விளையாடி வரும் இவர், தேசிய அளவிலான வாலிபால் போட்டிகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இதனால் தினமும் அதிகாலை சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக வைத்துள்ளார். நேற்று காலை நான்கு மணி அளவில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ள வீட்டிலிருந்து சென்றுள்ளார். கோடம்பாக்கம் - வள்ளுவர் கோட்டம் சாலை வழியாக சைக்கிளிங் சென்று, தியாகராய நகர் அபிபுல்லா சாலை வழியாக ரித்தீஷ் சாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது முகமூடி அணிந்திருந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் திடீரென ரித்தீஷை துரத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் நடைபாதைக்கும், சாலைக்கும் இடையில் ரித்தீஷின் சைக்கிளை, மடக்கிய மர்ம நபர்கள் செல்போன் உள்ளிட்ட பொருட்களை கேட்டு கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அச்சமடைந்த ரித்தீஷ் நடைபாதையின் மீது சைக்கிளை ஏற்றி தப்பியுள்ளார். சுமார் 500 மீட்டர் தூரம் முகமூடி கொள்ளையர்கள் துரத்தி வந்ததாகவும், அதிகாலை என்பதால் யாரையும் கூச்சலிட்டு உதவிக்கு அழைக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். அங்கு திறந்திருந்த தேநீர் கடையை பார்த்த ரீத்தீஷ் சாலையில் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடியதாகவும், அப்போது பின்புற பகுதியில் மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. காயத்துடன் தப்பி மரண பயத்தில் தேநீர் கட்டையில் தஞ்சம் புகுந்திருக்கிறார். அதிகாலை நேரம் என்பதால் தேநீர் கடையில் இருந்தவர்கள் மாணவனிடம் என்ன ஏது என்று விவரங்களை கேட்டு உள்ளனர். கடையில் இருந்த நான்கு ஊழியர்களும் தைரியமாக வெளியில் வர, அங்கிருந்து முகமூடி கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டன்ர். இதையடுத்து தேநீர் கடையில் இருந்து தனது தந்தைக்கு தகவல் சொல்லி அவரது குடும்பத்தினர் வந்து ரித்தீஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாண்டி பஜார் காவல் நிலைய போலீசார் புகாரை பெற்று பாதிக்கப்பட்ட மாணவனிடம் விசாரணை நடத்தினர். கடைக்கு வெளியில் கத்தியுடன் நின்று மிரட்டும் போது, அதில் ஒருவன் வாயில் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகவும், முகமூடி விலகிய அவனது முகம் வடமாநிலத்தைச் சேர்ந்தவன் போல் இருந்ததாக மாணவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். சம்பவம் நடந்த அபிபுல்லா சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments