Ticker

6/recent/ticker-posts

Ad Code

வேலூர்: அணித்திரட்டி அதிமுக-வில் இணைந்த மாவட்டத் தலைவர்! - காலியாகும் த.மா.கா கூடாரம்?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், வேலூர் மத்திய மாவட்டத் தலைவராக இருந்த பி.எஸ்.பழனி, கடந்த வாரம் திடீரென அக்கட்சியிலிருந்து வெளியேறினார். ‘‘கடந்த 18 ஆண்டுகளாக ஜி.கே.வாசனுக்கு விசுவாசமாக இருந்தும், உரிய முக்கியத்துவம் கிடைக்காததால், கட்சியிலிருந்து வெளியேறுகிறேன்’’ என்றும் அவர் விளக்கமளித்திருந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முன்கூட்டியே அதற்கான களப்பணிகளிலும் ஈடுபட்டுவந்த பழனிக்குக் கடைசிநேரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டதும், கட்சியிலிருந்து விலக முக்கியக் காரணம் எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் அ.தி.மு.க-வில் இணையவிருப்பதாகவும், முதலில் செய்தி வெளியிட்டது, ‘விகடன்.’

பி.எஸ்.பழனி

அதன்படியே, பி.எஸ்.பழனி தனது ஆதரவாளர்களை அணித்திரட்டி நேற்று அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். சேலத்திலிருந்த அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மலர்கொத்து கொடுத்து கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ‘‘சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்’’ என எடப்பாடி பழனிசாமி கூறியதாகச் சொல்கிறார் பி.எஸ்.பழனி.

இதனிடையே, விரைவில், ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினரும் அ.தி.மு.க-வில் இணையவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாகவும் கூறுகிறார் வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு. முக்கிய நிர்வாகிகளுடன் மாவட்டத் தலைவரே கட்சி மாறியிருப்பதால், வேலூர் மாவட்ட த.மா.கா கூடாரம் காலியாகியிருக்கிறது. அ.தி.மு.க-வில் இணைந்துள்ள பி.எஸ்.பழனிக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் கட்சி வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்துள்ளன.



from Latest News

Post a Comment

0 Comments