இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் என்றும் இருநாடுகளின் உறவு வலுப்பெறுவதை வரவேற்பதாகவும், தம்மை சந்திக்க வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர், ஆன்டனி பிளிங்கெனுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்தியா அமெரிக்கா இடையேயான உளவு சர்வதேச நலனுக்கான சக்தியாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கான ஆணிவேராகவும் உள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார். இருநாட்டு உறவை வலுப்படுத்துவதில் அதிபர் ஜோ பைடன் உறுதியுடன் இருப்பதை வரவேற்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை பிளிங்கென் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சீனா, ஆப்கான், இந்தோ பசிபிக் வர்த்தகம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளுடன் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் குறித்தும் இருவரும் பேச்சு நடத்தினார். ஜனநாயகம், மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை எழுப்ப அமெரிக்கா கேள்வி எழுப்பிய போது, இரண்டிலும் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, இரு நாடுகளும் கொள்கையளவில் இணைந்து செயல்படுவதாக பிளிங்கென் தெரிவித்தார். அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் சுதந்திரமான எண்ணம் கொண்ட குடிமக்களைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் சவால்களை, நட்பு முறையில் இந்தியாவுடன் விவாதித்து, ஜனநாயக உறவுகளை பலப்படுத்த உறுதி எடுத்துள்ளதாகவும் பிளிங்கென் தெரிவித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments