லடாக் எல்லையில் படைகளைக் குறைப்பது குறித்து இந்தியா சீனா தளபதிகளுக்கு இடையே இன்று 12வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனப் படையினர் முந்தைய நிலையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதுதொடர்பான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனப் படையில் பலரும் உயிரிழந்தனர். இதையடுத்து மோதலைத் தவிர்க்கவும் எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையிலான பேச்சுக்கள் நடைபெற்றன. இந்தியா-சீனா ராணுவத் தளபதிகள் இதுவரை நடத்திய 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பலனாக பாங்-கோங் ஏரிக்கரையை ஒட்டிய பகுதிகளில் இருந்து சீனா தனது பீரங்கிகள் உள்ளிட்ட படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டது. ஆனால் கோக்ரா மலை உச்சி, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்தப் பகுதிகளில் இருந்தும் சீனா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 12ஆவது சுற்றுப் பேச்சு இன்று காலை 10.30 மணிக்கு சீன எல்லைக்குள் உள்ள மால்டோ என்னுமிடத்தில் நடைபெற உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments