கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சாலையோரம் சென்ற கூலி தொழிலாளி மீது, இருசக்கர வாகனத்தை மோதி விட்டு நிற்காமல் சென்ற போதை ஆசாமியை பல கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று இளைஞர் ஒருவர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அந்த இளைஞரின் நண்பர்கள், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய கூலித்தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அரசு மருத்துவமனை அருகே நாகர்கோவில் நெடுஞ்சாலையில் 70-வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வியாழக்கிழமை மாலை ரத்த வெள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் கிடந்தார். இந்த நிலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போதை ஆசாமி மது போதையில் சாலையில் கிடப்பதாக நினைத்து அந்த முதியவரை கடந்து சென்றனர். முதலுதவி செய்வதற்கு கூட ஆள் இன்றி சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த முதியவரை, மனிதநேயமிக்க சில இளைஞர்கள் சாலையில் இருந்து தூக்கி நிமிர்த்தி தண்ணீர் தெளித்து எழுப்ப முற்பட்ட போது அவர் மயக்கமடைந்த நிலையிலேயே காணப்பட்டார். அப்போது அங்கு வந்த ஒருவர், முதியவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும், அவரது வண்டி நம்பரையும் இளைஞர்களிடம் தெரிவித்தார். அந்த இளைஞர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவெண்ணை வைத்து மோதிச் சென்ற வாகன ஓட்டியை தேடிச்சென்றார். மற்றவர்கள் அந்த முதியவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதற்கிடையே மோதிய வாகனத்தை தேடிச்சென்ற இளைஞர், பல கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று சம்மந்தப்பட்ட வாகன ஓட்டியையும், அவரது வாகனத்தையும் மடக்கி பிடித்து குளச்சல் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த நபர் குளச்சல் கீழ்கரை பகுதியை சேர்ந்த எலக்ட்ரிசியன் செல்வராஜ் என்பதும் போதையில் வாகனம் ஓட்டி வந்த அவர், சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த குளச்சல் நெசவாளர் தெருவை சேர்ந்த 70-வயதான கூலி தொழிலாளி ராஜமணி மீது மோதியதும் தெரியவந்தது. போதையில் இருக்கும் தன்னை பொதுமக்கள் அடித்து விடுவார்கள் என பயந்து தனது வாகனத்தை நிறுத்தாமல் தப்பிக்க முயன்றதாகவும், இளைஞர்கள் மடக்கி பிடித்ததாகவும் செல்வராஜ் போலீசில் தெரிவித்துள்ளார். போதை எலெக்ட்ரீசன் செல்வராஜை கைது செய்த நிலையில், உயிருக்கு போராடிவரும் முதியவர் ராஜாமணியை மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேடிக்கை மனிதர்கள் மத்தியில் காயம் பட்ட கூலித்தொழிலாளியை காப்பாற்றியதோடு , விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய குடிகார வாகன ஓட்டியை மடக்கிப்பிடித்த இளைஞர் குழுவினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments