சிகை நரைத்திட்ட வயதான முதுமை வேண்டும் என்கிறது சமகம் என்னும் வேத பாகம். இந்த உலகில் இளமை வேண்டும் என்று கேட்பவர்கள் அதிகம். அப்படியிருக்க ஏன் முதுமை வேண்டும் என்று கேட்கிறார்கள் என்பது சிந்தனைக்குறியது. கோவிட் காலத்தின் பெரிய பிரச்னைகளில் ஒன்று திடீர் மரணங்கள். இளம் வயதிலேயே பலரும் மரணத்தை சந்திக்கிறார்கள். இதன் காரணமாக பலர் மன அழுத்தங்களுக்கும் பயத்துக்கும் ஆளாகிறார்கள்.
ஞானியிடம் ஒருவர் கேட்டார், “மரணம் வருவது குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
இந்த நாளில் இந்த நேரத்தில் என்று தெரிந்துகொண்டுவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார் போல. அந்த ஞானி சிரித்துக்கொண்டே சொன்னார்.
“இந்த உலகத்தில் பிறந்த உயிர்கள் அனைத்துக்கும் எது உறுதியாக நிகழும் என்றால் அது மரணம்தான். எனவே எப்போதும் அதற்குத் தயாராக இரு” என்றார்.
மகாபாரதத்தில் பீஷ்மர் தனது விருப்பப்படி மரணத்தை தழுவினார். உத்தராயண காலம் வரும் வரை, மரணத்தைத் தள்ளி வைத்தார். ராமனின் பிரிவு தனக்கு மரணத்தைத் தரும் என்பது தசரதருக்குத் தெரியும். பரீக்ஷித்துக் கும், 'ஏழு நாள்கள் நிறைவுற்றதும் தனக்கு மரணம்!' என்று அறிந்திருந்தான். இவ்வாறு மரணத்தை முன்பாகவே அறிந்துகொண்டவர்கள் பலர் உண்டு.
பிறப்பு உள்ளவனுக்கு இறப்பும் உண்டு. வேதம், நூறு வயது வாழ அருளுகிறது. ஜோதிடம், 120 வயது வரை வாழ்வளிக்கிறது. தர்மசாஸ்திரம், மரணத்தை வெல்ல வழி சொல்கிறது. 'இறப்பு- பிறப்பு என்ற சுழலில் மாட்டிக்கொண்டு தவிக்காதே. அதிலிருந்து விடுபட வழி சொல்கிறேன், கேள்!' என்கிறார் ஆதிசங்கரர். இவ்வளவு ஏன் படைப்பவராகிய பிரம்மாவுக்கும் ஆயுள் எல்லை உண்டு என்கிறது புராணம்.
ஜோதிடம், மரண வேளையை வரையறுக்கிறது. உடலில் தோன்றும் பிணிகளும் மரண வேளையை நமக்குத் தெரியப்படுத்தும். படுக்கையில் விழுந்தவன், தனது உடலில் இருந்து ஒவ்வோர் அணுவும் தனித் தனியாகப் பிரிவதை உணர்வான். அடுத்து உயிர் பிரிந்து விடும்.
குறிப்பிட்ட சில கனவுகள், பொருட்கள் இரண்டு இரண்டாகத் தென்படுவது, முன்னோர்களது பெயர்களைச் சொல்லிப் புலம்புவது, ஒன்றை மற்றொன்றாகப் பார்த்தல் முதலானவை மரணம் நெருங்குவதற்கான அறிகுறிகள் என்கிறது ஆயுர்வேதம்.
ஆகவே, மரணத்தையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். அது வரும்போது வரட்டும்; மறந்து விடுங்கள். மரண பயம் நம்மைப் பிடித்துக்கொண்டுவிட்டதா அதை விரட்ட எளிய 5 பரிகாரங்கள் உண்டு. ஒன்று மிருத்யுஞ்சய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது. மற்றொன்று மிருத்யுஞ்சய ஹோமத்தில் கலந்துகொள்வது. திருவண்னாமலை கிரிவலப்பாதையில் யம லிங்கம் உள்ளது. அதை தரிசனம் செய்தால் பயம் விலகும். திருவெண்காடு, திருக்கடையூர், திருப்பட்டூர் ஆகிய தலங்களுக்குச் செல்ல வேண்டும். இங்கு வழிபடுவதன் மூலம் தீர்க்க ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முத்தாய்ப்பாக திருவாரூரில் எமனுக்கு வேலை இல்லை என்கிறது புராணங்கள். அங்கு சென்று தியாகேசப் பெருமானை வழிபாடு செய்தால் மரண பயம் முற்றிலும் நீங்கும். சிவனருள் எப்போதும் துணையிருக்கும்.
from Latest News
0 Comments