Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனா: `நாட்டில் 22 மாவட்டங்கள்; அதில் கேரளத்தில் மட்டும் 7’ - அதிகரிக்கும் பரவலால் அதிர்ச்சி

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா கொடுந்தொற்று, இந்தியாவில் இரண்டாம் அலையில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது. பல மாநிலங்களில் கொரோனா குறைந்துவரும் நிலையில், சில மாநிலங்களில் கொரோனா பரவல் கவலை அளிக்கும்விதமாக உள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளத்தில் கொரோனாத் தொற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

கடந்த 25-ம் தேதி கேரளத்தில் 17,466 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று முன் தினம் 11,586 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை எதிர்பாராதவிதமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 22,129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேரளத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 1,45,371 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 156 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொத்த மரண எண்ணிக்கை 16,326 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 4,36,387 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளா

மாவட்ட வாரியாக கணக்கிடும்போது மலப்புறம் மாவட்டத்தில் 4,037 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் 2,623, கோழிக்கோடு 2,397, எர்ணாகுளம் 2,352, பாலக்காடு 2,115, கொல்லம் 1,914, கோட்டயம் 1,136, திருவனந்தபுரம் 1,100, கண்னுர் 1,072, ஆலப்புழா 1,064, காஸ்ர்கோடு 813, வயநாடு 583, பத்தனம்திட்டா 523, இடுக்கி மாவட்டத்தில் 400 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அதில் ஏழு மாவட்டங்கள் கேரளமாநிலத்தைச் சேர்ந்தவை. கேரளத்தின் ஆலப்புழா, கோட்டயம், மலப்புறம், திருச்சூர், வயநாடு, எர்ணாகுளம், பத்தனம்திட்டா ஆகிய ஏழு மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா அதிகரித்துவருவதால் மாநில அரசுடன் இதுகுறித்து விவாதித்துள்ளதாகவும், கொரோனா அதிகரித்துவரும் மாவட்டங்களில் எந்த காரணத்கைக் கொண்டும் தளர்வுகள் ஏற்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். கேரளத்தில் பத்து மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதமாக உள்ளதாக லவ் அகர்வால் தெரிவித்திருக்கிறார். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் ஓணப்பண்டிகை கடந்த ஆண்டைப்போல கடும் கட்டுப்பாட்டுடன் கொண்டாடும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.



from Latest News

Post a Comment

0 Comments