பொதுமுடக்கம் ஆக. 9 வரை நீட்டிப்பு: தமிழகத்தில் பொதுமுடக்கத்தை ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.
சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை: கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்திருக்கிறது.
2ஆவது நாளாக தொற்று அதிகரிப்பு: தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 947 பேருக்கு தொற்று உறுதியானது.
கூட்டம் கூடினால் அந்த பகுதியை மூடலாம்: கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதிகளவில் கூட்டம் கூடும் பகுதியை மூட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
3ஆம் அலையை தவிர்க்க கூடுதல் விழிப்புணர்வு தேவை: தமிழகத்தில் மூன்றாவது அலை ஏற்படாமல் தவிர்க்க கூடுதல் விழிப்புணர்வு தேவை எனவும், வருமுன் காத்தலே விவேகம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் கட்டாய விடுமுறை வழங்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பிறந்தநாள், திருமண நாளன்று குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் விடுப்பு வழங்க அறிவுறுத்தி இருக்கிறார்.
நம்பிக்கை அளிக்கும் இந்திய வீராங்கனைகள்: டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் லவ்லினா. மகளிர் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.
27% இடஒதுக்கீடு - அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி: அகில இந்திய மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது அதிமுக சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம்: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் 85 விழுக்காடு கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை - அரசு விளக்கம்: தமிழகத்தில் எய்ம்ஸ்க்காக தற்காலிகமாக தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படலாம் என்றும், எய்ம்ஸ் நிர்வாகம் பொருத்தமான இடத்தை தேர்வு செய்தால் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்திருக்கிறது.
சிபிஎஸ்இ பிளஸ் டூ மதிப்பெண்கள் வெளியீடு: சிபிஎஸ்இ பிளஸ் டூ மதிப்பெண்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியானது. 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள், 12 ஆம் வகுப்பு பருவத்தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
130 அவதூறு வழக்குகள் ரத்து: விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட 130 அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். விஜயதாரணி, கனிமொழி, பழ கருப்பையா உள்ளிட்டோர் மீதான வழக்குகளும் கைவிடப்படுவதாகவும் அறிவித்திருக்கிறார்.
மேட்டூர் - நீர் திறப்பு 14,000 கன அடியாக அதிகரிப்பு: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சேலம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மணிகண்டன் கோரிக்கை - நீதிமன்றம் நிராகரிப்பு: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என நடிகை புகாரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கமுடியாது: சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்: செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஒருவருக்கு இருவேறு தடுப்பூசி- சோதனைக்கு அனுமதி: ஒருவருக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்த முடியுமா? என 300 தன்னார்வலர்களை கொண்டு பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெகாசஸ் விவகாரம் - ஆகஸ்ட்டில் விசாரணை: பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்ட் முதல்வாரத்தில் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. மூத்த பத்திரிகையாளர் ராம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
தொல்தமிழரின் தாய்மடியை தேடி... : புதுக்கோட்டையின் பொற்பனைக்கோட்டையிலும் பாய்கிறது தமிழர் தொன்மையின் புதுவெளிச்சம். கோட்டை, கொத்தளங்கள் இருந்ததாக கருதப்படும் இடங்களில் அகழ்வாய்வு தொடங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 3 வரை மழை நீடிக்கும்: ஆகஸ்டு 3ஆம் தேதி வரை கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என அறிவித்திருக்கிறது.
தடுப்பூசி போட்டால் 100 டாலர் வெகுமதி: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 100 டாலர் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments