Covid Question: தினமும் சத்தான பேலன்ஸ்டு டயட் சாப்பிட்டு, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி வெளியில் எங்கும் அலையாமல் இருந்தால்கூட கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?
- அலமேலு சீனிவாசன்
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் பிரவீன் ராஜ்.
``நீங்கள் பின்பற்றுவதாகச் சொல்கிற பேலன்ஸ்டு டயட்டும், தனிமனித இடைவெளியும், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பதும் மிகச் சரியான விஷயங்களே. அவையெல்லாம் உங்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயத்தைப் பெரிய அளவில் தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவை உங்களுக்கு கொரோனா தொற்றே வராமல் காக்கும் என்று சொல்ல முடியாது.
கொரோனா தொற்று ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம். நீங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமலிருந்தாலும் உங்கள் வீட்டுக்கு வரும் வேலையாட்கள், டிரைவர், உங்கள் வீட்டிலிருந்து வெளியே சென்று வருவோர் என யார் மூலமாகவும் உங்களுக்குத் தொற்று பரவலாம். கொரோனா தொற்றுள்ளவர்கள் புழங்கிய இடங்களை, பொருள்களைத் தொடுவதால் அடுத்தவருக்குத் தொற்று பரவுமா என்பதும் இன்னும் சரியாக நிரூபிக்கப்படவில்லை.
பேலன்ஸ்டு டயட் என்பது உங்களுடைய நோய் எதிர்ப்பாற்றலுக்கு அவசியமானது. நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ளோருக்கு தொற்று வரும் வாய்ப்புகள் குறையும். அப்படியே வந்தாலும் அது தீவிரமாகாமல் இருக்கும். ஆனால் தடுப்பூசி என்பது நம் உடலின் ஆன்டிபாடி செல்களை அதிகப்படுத்தக்கூடியது. அதாவது கொரோனா தொற்றிலிருந்து பெரிய அளவுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடியது தடுப்பூசி மட்டுமே.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவதோடு, சரிவிகித உணவு உட்கொள்வது, கூடவே தடுப்பூசி போட்டுக்கொள்வது என எல்லாம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்போது உங்களுக்குத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. பாதுகாப்பாக இருப்பதாக உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு, தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்கவோ, தாமதிக்கவோ செய்யாதீர்கள்."
Also Read: Covid Questions: தடுப்பூசியின் 2-வது டோஸை காலம் தாழ்த்திப் போடுவதால் அதன் செயல்திறன் நீடிக்குமா?
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
from Latest News
0 Comments