Ticker

6/recent/ticker-posts

Ad Code

புதுக்கோட்டை: கடலுக்குள் மூழ்கி மாயமான மீனவர்! - சோகத்தில் மூழ்கிய கிராமம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள வடக்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த தினமணி என்பவரது நாட்டுப்படகில் தினமணி, அவரது மகன் வசீகரன்(19) சக மீனவர்களான மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கரையிலிருந்து 16 கடல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, வசீகரன் படகின் எஞ்ஜின் பக்கம் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் எதிர்பாராத விதமாக நாட்டுப்படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்துள்ளார். உடனே அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் கடலில் குதித்துத் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், உடனே கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

உடனே அங்கு வந்த கடலோர காவல் படையினர் சக மீனவர்களின் உதவியோடு, 2 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் தொடர்ந்து தேடி வருகின்றனர். மீனவர் கடலுக்கு விழுந்து மூழ்கிய சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன் கடலில் மூழ்கிய வசீகரனின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் அளித்ததோடு, ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கினார். தொடர்ந்து இதுகுறித்து பேசிய அமைச்சர், "கடலுக்குள் விழுந்து மாயமான மீனவரைக் கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கக்கோரி மீன்வளத்துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். கூடுதல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு, தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் அனுப்ப அரசு தயாராக இருக்கிறது" என்றார்.



from Latest News

Post a Comment

0 Comments