Ticker

6/recent/ticker-posts

Ad Code

மயக்க ஊசியுடன் தப்பி வனத்தை அதிரவிட்ட கொம்பன் அடங்கினான்..! அடுத்த டார்கெட் பாகுபலி

மதம் கொண்டு மரங்களை முறித்து வனத்தை அதிரவிட்டதோடு, வனத்துறையினர் செலுத்திய மயக்க ஊசியோடு தப்பிச் சென்று விவசாய நிலங்களையும் நாசம் செய்த ஒற்றைக் கொம்பன், ஒரு மாத பயிற்சியால் கோவில் யானை போல சாந்தமாகி உள்ளது. கொம்பனை விட்டு பாகுபலியை தேடும் வனத்துறையினரின் அடுத்த வேட்டைக்கு விழுந்த தடை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தந்தை, மகன் உள்ளிட்ட மூவரை கொன்ற சங்கர் என்கிற ஒற்றை கொம்பன் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, மனிதர்களை தாக்குவது, இரவு மற்றும் பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 12 ம் தேதி கும்கிகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 40 பேர் கொண்ட வனத்துறையினர், முயற்சித்த நிலையில் குத்திய ஊசியுடன் காட்டிற்க்குள் ஓடி யானை கூட்டத்துடன் சேர்ந்து வனத்துறைக்கு போக்குகாட்டினான் ஒற்றை கொம்பன்..! பின்னர் யானை கூட்டத்தில் இருந்து ஒற்றை கொம்பனை தனியாக பிரித்து மயக்க ஊசி செலுத்தி கடும் போராட்டத்திற்கு பின் பிடிக்கப்பட்டது.பிடிபட்ட ஒற்றை கொம்பன் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அபயாரண்யம் முகாமில் கரால் கூண்டில் அடைக்கப்பட்டு ஒற்றை கொம்பன் சங்கரை வளர்ப்பு யானையாக பழக்கப்படுத்தினர். கால்நடை மருத்துவ குழு பல்வேறு யுக்திகளை கையாண்டு தற்போது வளர்ப்பு யானையாக மாறி தற்போது பாகனின் சொலிற்கு கட்டுப்பட்டு தன் மீது ஏறி அமர்ந்து கொள்ள அனுமதிக்கும் அளவிற்கு கோவில் யானை போல பவ்வியமாக மாறி உள்ளான் ஒற்றைக்கொம்பன் சங்கர். யானை பாகன் விக்ரமிடம் கேட்கும் போது, யானை கரால் கூண்டில் அடைக்கப்பட்ட சில நாட்கள் மட்டுமே அடம் பிடித்தது நல்ல பயிற்சிக்குப்பின் தற்போது நன்கு உணவு உட்கொள்கிறது, நாம் சொல்வதை எளிதாக புரிந்து கொள்ளும், உடல்நலம் நல்ல முழு ஆரோக்கியமாக இருக்கிறது என்றார். உடைந்த கொம்புடன் ஆட்கொள்ளி யானையாக இருந்த ஒற்றை கொம்பன் நான்கு மாத சிறை வாழ்க்கைக்குப் பின் வரும் ஜூலை 4 ம் தேதி கராலில் இருந்து வெளியே விடப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானையாக பராமரிக்கப்படும் என்கின்றனர் வனத்துறையினர். இதற்கிடையே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நெல்லித்துறை தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த பாகுபலி என்று பெயரிடப்பட்ட ஆண் காட்டு யானை வனத்துறையினருக்கு போக்குகாட்டி வருகின்றது அந்த ஆண் காட்டு யானை ஒரு இடத்தில் நிற்காமல் அடர்ந்து காடுகளுக்குள்ளும், பல்வேறு பகுதிக்கும் சென்று வருவதால் அதனை திட்டமிட்டு பிடிக்க முடியாததால் வனத்துறையினருக்கு அதனை பிடிப்பது சவாலாக மாறியுள்ளது. இதனால் பாகுபலியை தேடும் பணியை 10 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளனர். மீண்டும் ஊருக்குள் வந்தால் அந்த யானை மீது ரேடியோ காலர் கருவி பொருத்தி அது சுதந்திரமாக தனியே வரும் போது அதனை பிடிக்கும் திட்டத்துடன் வனத்துறையினர் காத்திருக்கின்றனர். ஒற்றைக் கொம்பனோ பாகுபலியோ மதம் அடங்கினால் மட்டுமே வனத்துறையினருக்கு நிம்மதி இல்லையேல் அதனை பிடித்து கரால் கூண்டில் அடைக்கும் வரை நித்தமும் நித்திரை இழப்புத்தான்..!

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments