வங்கிக்கணக்குடன் பான் கார்டு எண்ணை வீட்டில் இருந்தபடியே இணைக்க ஆன்லைனில் லிங் அனுப்பி இருப்பதாக கூறி முதியவர்களின் வங்கி கணக்கில் இருந்து மொத்தப் பணத்தையும் அபேஸ் செய்யும் ஜார்க்கண்ட் கும்பல் கைவரிசை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வங்கி பண மோசடி கும்பலிடம் சிக்காமல் ஆன்லைன் பணபரிவர்த்தனை மேற்கொள்வது குறித்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை மாவட்ட சைபர்கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் நிர்மலா, வாட்ச் அப் மற்றும் முகநூலில் துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் கடந்த 6 மாதங்களாக முதியவர்களின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து அவர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி மேனேஜர் பேசுவதாக கூறி, வங்கி கணக்குடன் பான்கார்டு எண்ணை இணைப்பதற்கு லிங்க் அனுப்பி இருப்பதாக அவர்கள் மூலமாகவே ஓடிபி எண்களைப் பெற்று, வங்கியில் உள்ள மொத்தப் பணத்தையும் வேறு வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளையடிப்பதை வாடிக்கையாக செய்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளர். வங்கி மேலாளர் மட்டுமல்ல காவல்துறையில் இருந்து பேசுவதாக கூறினால் கூட வங்கி கணக்கு விவரங்களையோ, ஏ.டி.எம் பின் நம்பரையோ, கிரெடிட் கார்டின் பின்புறம் உள்ள 3 இலக்க சிவிவி நம்பரையோ, ஆதார் எண்ணையோ கட்டாயம் கொடுக்க கூடாது என்றும் எச்சரிக்கிறார் நிர்மலா. தற்போது அதிகம் நடக்கின்ற வங்கி மோசடிகளில் இருந்து தப்புவது குறித்தும் அவர் விளக்கினார். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப்பில் உங்கள் நண்பர் பெயரை கூறி அவசரத் தேவை என்று கடன் கேட்டால், சம்பந்தப்பட்ட நண்பரிடம் கேட்டு உறுதிப்படுத்திய பின்னரே பணம் செலுத்தவேண்டும். உங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கைபேசிக்கு நீண்ட நேரமாக நெட் ஒர்க் சிக்னல் கிடைக்கவில்லை எனில் உடனடியாக அந்த பரிவர்த்தனையை நிறுத்திக் கொள்வது நல்லது. மிலிட்டரியில் பணிபுரிவதாக அடையாள அட்டையை வாட்ஸ் அப்பில் அனுப்பி மதுபானம் உள்ளிட்டவற்றை குறைந்தவிலையில் தருவதாக கூறிக் பணம் அனுப்ப சொன்னால் ஏமாந்துவிடாதீர்கள், ஆன்லைன் மூலம் குறுகிய கால கடன் தருவதாக கூறி ஆதார் எண், பான் கார்டு எண் கேட்டால் கொடுக்காதீர்கள், உங்கள் பெயரில் புதிய வங்கி கணக்கு தொடங்கி உங்களுக்கு தெரியாமலேயே அதிக கடன் பெற்று மோசடியில் ஈடுபட முடியும் என்பதை உணருங்கள் என்று சுட்டிக்காட்டும் காவல் ஆய்வாளர் நிர்மலா, அவசர தேவைக்கு கூகுல் பே, பே டீம் போன்றவற்றின் மூலம் பணம் அனுப்பும் போது வேறு நபர்களுக்கு சென்றுவிட்டால் கூகுளில் சென்று அதில் கொடுக்கப்படும் புகார் எண்ணில் புகார் அளிக்காதீர்கள். அதில் உள்ள போலிகள் உங்கள் முழு கணக்கு விவரங்களையும் திருடி மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளார் காவல் துறையினர் ஆயிரம் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனையில் ஈடுபடுவோர் சற்று உஷாராக இருந்தாலே போதும், ஜார்க்கண்டில் இருந்து ஆளுக்கு தக்கபடி பேங்க் மேனேஜர் பேசுறேன்னு சொல்லி பணத்தைப் பறிக்க பிளான் போடும் பிக்பாக்கெட் திருடர்களிடம் இருந்து எளிதாக தப்பலாம்..!
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments