மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'விண்டோஸ் 11' (Windows 11) இயங்குதளம் தொடர்பான விவரங்களை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வில், 'விண்டோஸ் 11' அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இயங்குதளத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன, இதை எப்போது தரவிறக்கம் செய்யலாம், என்னென்ன பயன்கள் என்பது போன்ற சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.
விண்டோஸ் தொடர்ச்சி: பர்சனல் கம்ப்யூட்டர் உலகில் விண்டோஸ் இயங்குதளம் மிகவும் பிரபலமானது. பெரும்பாலான பிசி-க்கள் விண்டோஸில்தான் இயங்குகின்றன. விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியானபோது, 'விண்டோஸ் வரிசையில் இதுவே கடைசியாக இருக்கும், இதன் பிறகு புதிய வெர்ஷன்கள் இருக்காது' என மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தாலும், ஐந்தாண்டுகளுக்கு பின், இப்போது விண்டோஸ் 11 இயங்குதளத்தை அறிமிகம் செய்துள்ளது.
விண்டோஸ் அப்டேட்: விண்டோஸ் 11 இயங்குதளம் புதிதாக அறிமுகமானாலும், உண்மையில் இது விண்டோஸ் 10 வெர்ஷனின் அப்டேட்டாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் ஏற்கெனவே விண்டோஸ் 10 வைத்திருப்பவர்கள், இந்த வெர்ஷனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். அநேகமாக இந்த அப்டேட் இலவசமாக இருக்கும் என்றாலும், இதை நிறுவிக்கொள்ள பிசி அல்லது லேப்டாப் நவீன வசதிகளுடன் இருக்க வேண்டும். இல்லை எனில், உங்கள் பிசிக்கு ஆற்றல் இல்லை என்பது போன்ற மெசேஜ் வரும்.
எப்போது கிடைக்கும்? - விண்டோஸ் 11 அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு இறுதியிலேயே சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது விண்டோஸ் 11 நிறுவப்பட்ட புதிய லேப்டாப்கள் விற்பனைக்கு வரும். மேலும் விண்டோஸ் 11 இயங்குதளத்தை பயன்படுத்த டிபிஎம் சிப் இருந்தால் நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
ஸ்டார்ட் மெனு: விண்டோஸ் 11-க்கு அப்டேட் செய்துகொள்ள உங்கள் பிசிக்கு அதிக ஆற்றல் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டாலும், அப்டேட் ஆன பிறகு பிசி தோற்றமே மாறிவிடும் என்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், விண்டோசின் முக்கிய அடையாளமான ஸ்டார்ட் மெனு, இடது பக்கத்தில் இருந்து மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேக் மற்றும் குரோம் ஓஎஸ் போன்ற இந்த அம்சத்திற்கு பழக கொஞ்சம் நாட்கள் தேவைப்படலாம்.
ஸ்டார்ட் மெனு, ஆண்ட்ராய்டு தன்மையுடன் இருப்பதால், இதில் நேரலை டைல்கள் இருக்காது. அண்மைக் கோப்புகள் மற்றும் செயலி தேடல் மூலம் தேவையானவற்றை அணுகலாம்.
லே அவுட்: விண்டோஸ் 11 இயங்குதளத்தில் ஸ்னேப் லே அவுட் மற்றும் ஸ்னேப் குரூப் ஆகிய அம்சங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் பல வேலைகளை மேற்கொள்ள இவை உதவியாக இருக்கும். செயலிகளை, பல்வேறு தோற்றங்களில் ஒன்றாக சேர்த்து வைக்க ஸ்னேப் வசதி உதவுகிறது. மேலும் திரையை நான்காக பிரிந்து செயலிகளை வகைப்படுத்திக் கொள்ளலாம். ஸ்னேப் குரூப் மூலம் செயலிகளை எளிதாக அடையாளம் காணலாம்.
இதேபோல, மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 சந்தாதாரர்கள் கோப்புகளை ஸ்டார்ட் மெனு மூலம் வேறு தொடர்புடைய சாதனங்களில் இருந்தும் தேடி எடுக்கலாம். விண்டோஸ் 11 இயங்குதளத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மானிட்டர்களை எளிதாக அணுகலாம்.
அப்டேட் அமைதி: விண்டோஸ் 10 பயனாளிகளுக்கு அதன் அப்டேட் வசதி எத்தனை சிக்கலானது என்பது தெரிந்திருக்கும். ஆனால், விண்டோஸ் 11-ல் இந்த பிரச்னை இருக்காது என்கிறது மைக்ரோசாஃப்ட். இந்த இயங்குதளம் பயன்பாடு மற்றும் செயல்திறனை 40 சதவீதம் மேம்படுத்தும். ஆனால், இதன் அப்டேட்கள் சிறியதாக இருக்கும், பணிக்கு இடைஞ்சலாக அமையாது என்றும் தெரிவித்துள்ளது. ஆக, பின்னணியில் அப்டேட் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் பணியை தொடரலாம்.
டீம்ஸ் வசதி: மைக்ரோசாப்ட் டீம்ஸ் எனும் பெயரில் அலுவலக பணிகளுக்கான கூட்டு முயற்சி மென்பொருளை கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஜூம் மற்றும் ஸ்லேக் மென்பொருள் போன்ற வசதிகொண்ட இந்த மென்பொருளை விண்டோஸ் 11-ல் நேரடியாக அணுகலாம். எளிதாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். வீடியோ கூட்டங்களில் பங்கேற்கலாம். அதே நேரத்தில் மைக்ரோசாஃப்ட் கைவிடுவதாக அறிவித்த எக்ஸ்பிளோரர் பிரவுசர் இதில் இருக்காது.
இந்த இயங்குதளத்தில் உள்ள விட்ஜெட்களை கொண்டு பயனாளிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட தன்மையோடு திரையை அமைத்துக்கொள்ளலாம்.
இந்த இயங்குதளம் தொடுதிரை வசதியையும் கொண்டிருக்கிறது, குரல் வழி டைப் வசதையும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எக்ஸ் பாக்ஸ் கேமிங் வசதியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு செயலிகள்: எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக இந்த இயங்குதளத்தில் மைக்ரோசாஃப்ட் செயலி ஸ்டோர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்ரோட் திறந்த தன்மை கொண்டிருப்பதால், இதில் ஆண்ட்ராய்டு செயலிகளையும் எளிதாக அணுகலாம். அமேசான் ஆப்ஸ்டோர் மூலம் இது சாத்தியமாகிறது.
- சைபர்சிம்மன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments