கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனாவால் பாதித்த துறைகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இதில் சுகாதார கட்டமைப்புக்கு 50 ஆயிரம் கோடி ரூபாயும், பிற துறைகளுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாயும் கடன் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என தெரிவித்தார். மருத்துவமனைகள் உள்ளிட்ட கூட்டமைப்பு வசதிகளை அமைக்க 100 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நிதியமைச்சரின் அறிவிப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு உதவ முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், அவர்களது செலவுகளை குறைத்து, வருமானத்தை அதிகரித்து, அதிகளவிலான உறுதிக்கும், வேளாண் செயல்பாடுகளின் நிலைத்தன்மைக்கும் ஆதரவளிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதாக பாராட்டுத் தெரிவித்தார். சுற்றுலாவுடன் இணைந்துள்ளோருக்கு உதவ, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்த நடவடிக்கைகள் பொருளாதார செயல்பாடுகளுக்கு புத்தாக்கம் அளித்து, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் என்றும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments