Ticker

6/recent/ticker-posts

Ad Code

Covid Questions: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் இருக்குமா?

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் பிறக்கும் குழந்தை எதிர்ப்புசக்தியுடன் இருக்குமா?

- பழனிவேல் (விகடன் இணையத்திலிருந்து)

கர்ப்பிணி

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

``கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என இந்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. இந்திய மகப்பேறு மருத்துவக் கழகம், கர்ப்பிணிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம், அது பாதுகாப்பானது என்று சொன்ன பிறகும் அரசுத் தரப்பில் இன்னும் அதற்கு சம்மதம் வரவில்லை. கர்ப்ப காலத்தில் தாய் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்குமா என்பதற்கான புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை.

கர்ப்பகாலத்தில் தொற்று ஏற்பட்டதை வைத்துதான் இதைக் கண்டுபிடித்தார்கள். கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது நஞ்சு மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு ஆன்டிபாடி போவது மட்டுமன்றி, தாய்ப்பாலின் வழியேவும் அது சிறிதளவு குழந்தைக்குப் போனது தெரிய வந்திருக்கிறது. இதை வைத்துதான் mRna தடுப்பூசிகள் கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானவை என்று சொன்னார்கள். அமெரிக்காவில் மாடர்னா மற்றும் ஃபைஸர் தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்குப் போடப்பட்டிருக்கின்றன.

கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடலாம் என்றால் எப்போது போடலாம் என்ற கேள்வி எழும். டிடி, ஃப்ளூ தடுப்பூசிகளைப் பொதுவாக இரண்டாவது ட்ரைமெஸ்டர் எனப்படும் கர்ப்பத்தின் 6-7வது மாதங்களில் போடுவார்கள். கோவிட் தடுப்பூசியையும் அதே காலத்தில் போடுவதன் மூலம் பிரசவத்துக்குள் அந்தப் பெண்ணுக்கு ஆன்டிபாடி உருவாகிவிடும்.

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது, அதனால் ஏதாவது பிரச்னை வருமா என்றால் வராது. ஆனால் அப்படிப் போடப்படும் தடுப்பூசியால் கிடைக்கும் ஆன்டிபாடியானது பிரசவம்வரை இருக்குமா என்பதற்கான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. ஆனால் கர்ப்பிணிக்கு தொற்று ஏற்பட்டாலும் குழந்தைக்கு எதிர்ப்புத்திறன் கிடைக்கும், தடுப்பூசி போட்டாலும் எதிர்ப்புத்திறன் கிடைக்கும். அதனால்தான் மற்ற நாடுகளில் கர்ப்பகாலத் தடுப்பூசி பாதுகாப்பானது என்று அனுமதித்திருக்கிறார்கள்".

கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தங்கள் இயல்பான தாம்பத்திய வாழ்க்கைக்கு எப்போது திரும்பலாம்?

-சித்ரா நாராயணன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சசித்ரா தாமோதரன்

Also Read: Covid Questions: கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?

``தொற்று குணமானதைக் கண்டறிய மறுபடி டெஸ்ட் எடுக்கச் சொல்லி மருத்துவர்கள் பெரும்பாலும் அறிவுறுத்துவதில்லை. முதல் நாள் டெஸ்ட் எடுத்திருப்பார்கள். அதில் பாசிட்டிவ் வந்திருக்கும். மூன்று நாள்கள் கழித்து அறிகுறிகள் ஏதுமில்லை என மறுபடி டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் அதில் நெகட்டிவ் என வரலாம். அதான் நெகட்டிவ் வந்துவிட்டதே என அந்த நபர் வெளியே போக ஆரம்பித்தால் அவர் மூலம் மற்றவர்களுக்குத் தொற்று பரவவோ, பாதிக்கப்பட்ட அந்த நபருக்கே தொற்று தீவிரமாகவோ வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த முறையில் உங்களுக்கு தொற்று குணமாகிவிட்டதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டாம். உங்களுக்குத் தொற்று வந்ததிலிருந்து 14 நாள்கள் கழித்து உடல்வலி, காய்ச்சல், சோர்வு என எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிந்தால் வழக்கமாக நீங்கள் செய்கிற எல்லா வேலைகளிலும் ஈடுபடலாம். தாம்பத்திய உறவுக்கும் இது பொருந்தும்".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


from Latest News

Post a Comment

0 Comments