Ticker

6/recent/ticker-posts

Ad Code

வீதி வரை கொரோனா... காடு வரை பிள்ளை... கடைசிவரை லஞ்சம்... சடலத்தை தகனம் செய்ய இயலாத அவலம்.!

ஈரோட்டில் அரசு சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த, ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியரின் சடலத்தை பாதுகாப்பாக பேக்கிங் செய்து கொடுப்பதற்கும், அதனை ஆம்புலன்சில் எடுத்துச் செல்வதற்கும், தகனம் செய்வதற்கும் தனித் தனியாக ஆயிரக்கணக்கில் பணம் லஞ்சமாக கேட்டதால் சடலத்தை பெற்று தகனம் செய்ய இயலாமல் 2  நாட்களாக அவரது மகன் காத்திருக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் பழனிச்சாமி. இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் மணிகண்டன் என்ற மகனும் விமலா என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் ஒப்பந்த துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பழனிச்சாமிக்கும் அவரது மனைவி இந்திராணி மற்றும் மகள் விமலாவுக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யபட்டு கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கபட்டனர். இதில் பழனிச்சாமிக்கு லேசான பாதிப்பு எனக்கூறிய மருத்துவர்கள், அவர் வீட்டில் இருந்து தனிமைபடுத்தி கொண்டு சிகிச்சை பெற அறிவுறுத்தியுள்ளனர்.ஆனால் பழனிச்சாமிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டத்கால், மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பழனிச்சாமியை கடந்த 18- ம் தேதி தனியார் கல்லூரியில் அமைக்கபட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பியுள்ளனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமி சனிக்கிழமை இரவு உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் மகன் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இரவு 12- மணிக்கு மேட்டூரில் இருந்து மனைவி தீபாவுடன் வந்ந மணிகண்டன் விடியும் வரையில் உறவினர்கள் சிலருடன் கொரோனா சிகிச்சை மையத்தில் காத்து இருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலையில் உடலை ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறி அதிகாரிகள், பெருந்துறை அரசு கொரோனா மருத்துவமனைக்கு சென்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை பேக்கிங் செய்யும் உபகரணங்களையும் பெருந்துறை மின்மயானத்தில் உடலை எரியூட்ட விண்ணப்பமும் பெற்று வரவும் அறிவுறுத்தியுள்ளனர். இவை அனைத்தையும் பெற்று வந்து கொடுத்தும் வெகுநேரம் ஆகியும் இலவச அமரர் ஊர்தியும் வரவில்லை உடலை பேக்கிங்கும் செய்ய வில்லை. மாலையான நிலையில் , அதிகாரிகள் மணிகண்டனை அழைத்து இலவச அவசர ஊர்தி கிடைக்க வில்லை என்றும் அதனால் தனியார் அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்ய வேண்டும் அதற்கு 7500ரூபாயும், உடலை பேக்கிங் செய்ய 8000 ரூபாயும் வேண்டும் என்று கேட்டுள்ளனர். மின்மயானத்தில் மாலை 5- மணிக்கு முன்பாக உடலை எரியூட்ட 6 - ஆயிரம் ரூபாயும் அதற்கு மேல் நேரம் சென்று உடலை எரியூட்டினால் 9000 ரூபாயும் லஞ்சமாக வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த மணிகண்டனும் அவரது உறவினர்களும் செய்வது அறியாது திகைத்து நின்றதுடன் கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள அதிகாரிகளுடன் அரசு மருத்துவமனையில் தாங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இலவச அமர் ஊர்தி வரும், உடலை கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ளவர்கள் பேக்கிங் செய்து தருவார்கள் என்று கூறிவிட்டு தற்போது இவ்வளவு பணம் கேட்பது ஏன் என்று கேட்டு முறையிட்டு கதறி அழுதுள்ளனர். காலையில் இருந்து காத்து கிடந்த மணிகண்டனும் அவரது உறவினர்களும், அவ்வளவு பணத்தை தயார் செய்யமுடியாமல் தவித்து இரண்டாம் நாள் ஆகியும் உடலை வாங்க முடியாமல் கொரோனா சிகிச்சை மையத்தின் வெளியே காத்து கிடக்கின்றனர். இதனையடுத்து மணிகண்டனிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்கும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் காவல்துறையினர் இலவச அவசர ஊர்தியை ஏற்பாடு செய்து பெருந்துறை மின்மயானத்தில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். லஞ்சப்பணம் பெறுவதில் உறுதியாக இருந்த பெருந்துறை மின்மயான ஊழியர்களோ, ஒரு தகன மேடை பழுதாகி விட்டதாலும் நேரம் கடந்து விட்டதாலும் உடலை அடக்கம் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். இதனை தொடர்ந்து பழனிசாமியின் சடலத்தை மீண்டும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு சென்று வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வைத்து அதிகாரிகளும், தனியார் அமரர் ஊர்தி உரிமையாளர்களும் கூட்டுக்கொள்ளை அடிப்பதுடன், மின்மயானத்திலும் பல ஆயிரம் லஞ்சப் பணம் கேட்கும் மனிதநேயமற்ற செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சம்பந்தப்பட்ட லஞ்ச பேய்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இலவசமாக தகனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே இது போன்ற பரிதவிப்புக்குள்ளானோரின் ஏக்கமாக உள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments