Ticker

6/recent/ticker-posts

Ad Code

திண்டுக்கல்: மருத்துவ காப்பீடு திட்டம்; பத்திரிகையாளர்கள் வைத்த கோரிக்கை! -நடவடிக்கை எடுத்த கலெக்டர்

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க தமிழகஅரசு ஆணையிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கிழ், கொரோனா தொற்று சிகிச்சை மேற்கொள்ள 25 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

விஜயலெட்சுமி - மாவட்ட ஆட்சியர்

"கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 25 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம். சிகிச்சைக்கு ஆகும் கட்டணம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “திண்டுக்கல் மாவட்டத்தில் நாளிதழ், காலமுறை இதழ்களின் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், தொலைக்காட்சிகளின் செய்தியாளர்கள், வீடியோகிராபர்கள், தாலுகா செய்தியாளர்கள் உட்பட சுமார் 600 பேர் இருக்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- திண்டுக்கல்

பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அங்கீகரித்துள்ளது. அதனால், மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் பயன்பெற அதற்கான அடையாள அட்டையை வழங்கிட வேண்டும். இதனால், பத்திரிகையாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் பயன் பெறுவார்கள்” என பத்திரிக்கையாளர்களின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமியிடம் வாட்ஸ் அப் மூலமாகக் கோரிக்கை வைத்தோம்.

உடனே, "உங்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்" என்று மாவட்ட ஆட்சியர் பதில் அனுப்பினார். தொடர்ந்து நம்மைத் தொடர்பு கொண்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி சாலி தளபதி, "பத்திரிகையாளர்களுக்கு உடனடியாகக் காப்பீடு அட்டை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். அடுத்த வாரத்தில் அதற்கான முகாமை நடத்தி அனைவருக்கும் காப்பீடு அட்டை வழங்கலாம். தேவைப்படும் பத்திரிகையாளர்களை அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலரை அணுகி, இத்திட்டத்துக்கான படிவத்தில் கையெழுத்து வாங்கி தயாராக வைக்கச்சொல்லுங்கள்" என்றார்.

இந்தத்தகவல், அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக பெரிய பத்திரிகை நிறுவனங்களில் மாவட்ட அளவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே மருத்துவ காப்பீடு வசதி செய்யப்பட்டிருக்கும்.

விஜயலெட்சுமி - மாவட்ட ஆட்சியர்

ஆனால், தாலுகா அளவில் பணிபுரியும் பல பத்திரிகையாளர்களுக்கு அவர்களது நிறுவனத்தின் சார்பில் காப்பீடு வசதி இருப்பதில்லை. இந்நிலையில், அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான அடையாள அட்டை கிடைத்தால் பெரும் உதவியாக அமையும். கோரிக்கை வைத்தவுடன் நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.



from Latest News

Post a Comment

0 Comments