சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் 19 வயதுடைய பெண் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `சென்னை நந்தனத்தைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன் (59), கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை சென்னை பிராட்வே பச்சையப்பன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தடகள பயிற்சி அளித்து வந்தார். எனக்கும் அவர் தடகள பயிற்சி அளித்தார். என்னைப் போல அவரிடம் பெண்கள் சிலர் பயிற்சி பெற்று வந்தனர். பல சமயங்களில் பயிற்சியை முடித்தப்பின் மற்ற பெண்களை அனுப்பிவிட்டு பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாகக் கூறி என்னை மட்டும் தனியாக அந்த வளாகத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் செல்வார்.
அங்கு என்னை அமர வைத்தும் படுக்க வைத்தும் உடலின் அனைத்து பகுதிகளிலும் பயிற்சியாளர் நாகராஜன் பயிற்சி என்ற பெயரில் அத்து மீறுவார். அதை அச்சத்துடன் நான் மறுத்தபோதும் தன்னுடன் ஒத்துழைத்தால் தடகள போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிப்பேன் என்று கூறி பாலியல் சீண்டல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார். என்னைப் போல சில வீராங்கனைகளிடம் நாகராஜன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் பூக்கடை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில் விசாரணைக்குப் பயந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன், தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவல் போலீஸாருக்கு கிடைத்ததும் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், `தடகள பயிற்சியாளர் நாகராஜன், மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்குள்ளாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தச் சூழலில்தான் வீராங்கனை ஒருவர் பயிற்சியாளர் நாகராஜன் குறித்து புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திவருகிறோம்.
பெண்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் பயிற்சியாளர் நாகராஜன் அவர்களுக்கு வழங்கிய தடகள பயிற்சியை நிறுத்திவிடுவார். பிரச்னை செய்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவார் என்றும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதுதவிர தடகள போட்டிக்கான பயிற்சி மையங்களில் உன்னைப்பற்றி தவறாக சொல்லிவிட்டு எந்த போட்டியிலும் கலந்து கொள்ள விடமாட்டேன் என்று நாகராஜன் கூறுவதால் மன உளைச்சலுடன் பாலியல் சீண்டல்களை வீராங்கனைகள் சகித்து வந்திருக்கின்றனர்.
Also Read: வீராங்கனைகளின் வறுமையைப் பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்தாரா தடகள பயிற்சியாளர் நாகராஜன்?!
பயிற்சியாளர் நாகராஜனின் பாலியல் சீண்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வீராங்கனை ஒருவரை அவரின் பெற்றோர் சென்னையிலிருந்து வேறு மாவட்டத்துக்கு பயிற்சிக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அவரை எந்தப் போட்டிகளிலும் கலந்துக் கொள்ள விடாமல் நாகராஜன் இடையூறு செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட வீராங்கனை கொடுத்த புகாரின்பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் (59) மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். விசாரணைக்குப் பயந்த நாகராஜன், தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனவே மேற்கண்ட பயிற்சியாளர் நாகராஜனால் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகாரளிக்கலாம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் 9444772222 என்ற செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக காக்கப்படும்” என்றனர்.
from Latest News
0 Comments