தளர்வுகளற்ற ஊரடங்கினால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் நீலகிரி ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
“கர்நாடகா மற்றும் கேரளா மாதிரியான அண்டை மாநிலங்களில் இருந்து மக்கள் வருவதும். வடமாநில தொழிலாளர்கள் அதிகம் இங்கு தங்கி பணிபுரிவதும், தொழிற்கூடங்கள் அதிகம் உள்ளதுமே கோவை பகுதியில் தொற்று பரவ காரணமாக உள்ளது. கோவை மட்டுமல்ல அனைத்து ஊர்களும் எங்கள் ஊர்தான். தமிழகத்தில் ஆக்ஸிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை இல்லை. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அரசும், மக்களும் சேர்ந்தால் கொரோனா மட்டுமல்ல எந்த நோயையும் நாம் வெல்லலாம். கொரோனா தடுப்பு பணியில் பாரபட்சம் பார்க்கவில்லை” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
கோவை, ஈரோடு பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த நிலையில் முதல்வர் இதனை தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு கோவை ஈ. எஸ். ஐ மருத்துவமனையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை வார்டுக்குள் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments