கடந்த காலங்களில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி. கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு, மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்ற நயினார் நாகேந்திரன், இந்த முறை அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார். 2016 சட்டசபை தேர்தலுக்கு முந்தைய தேர்தல் வரை, திருநெல்வேலி தொகுதியில் யார் வெற்றி பெற்றார்களோ, அவர் சார்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளரான ஏ.எல்.எஸ். லட்சுமணன் வெற்றி பெற்றாலும், அதிமுகவே ஆட்சி அமைத்தது.இத்தொகுதியில் 1952 முதல் 2016 வரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவும், திமுகவும் தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன. 3 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. 1986-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர். எம். வீரப்பன் வெற்றி பெற்றார். கடந்த 2016-ல் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பாக போட்டியிட்ட ஏ.எல்.எஸ். லட்சுமணன் 601 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்குக் கிடைத்த வாக்குகள் 81,160.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். ஏற்கெனவே இவர் அதிமுகவில் இருந்தபோது 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மட்டுமல்ல அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். அந்த வகையில் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர்தான் நயினார் நாகேந்திரன். இந்த நிலையில், இந்த முறை எப்படியும் தான் சார்ந்த பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, தேர்தலுக்குப் பல மாதங்கள் முன்னரே களப்பணியைத் தொடங்கி இருந்தார். திருநெல்வேலி தொகுதி தனக்குத் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர் பாஜகவில் இணைந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் நெருக்கத்தில் இத்தொகுதி நடிகை குஷ்புவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற ஒரு பேச்சு எழுந்ததால், முன்னெச்சரிக்கையாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் முன்னரே, அவர் அவசர அவசரமாக தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது கட்சித் தலைமையை மட்டுமல்ல, கூட்டணி கட்சியான அதிமுகவையுமே அதிர்ச்சியடைய வைத்தது. இத்தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்த நிலையில், பழைய நட்பின் அடிப்படையில் அவர்களை ஒருவாறு நயினார் நாகேந்திரன் சமாதானப்படுத்தி, ஒத்துழைப்பைப் பெற்றார். அந்த வகையில் அதிமுக வாக்குகள்தான் அவரது பலமாகவே இருந்தன. மேலும், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவான தேவர் சமுதாய வாக்குகளைப் பிரிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக வேட்பாளர் பால்கண்ணன் மனு நிராகரிக்கப்பட்டதும் கூடுதலான சாதகமாக பார்க்கப்பட்டது. அதே சமயம், கடந்த 2016 தேர்தலில் பெரிய அளவுக்கு கூட்டணி இல்லாமல் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் லட்சுமணனுக்கு இந்த முறை கூட்டணி பலம் அதிகரித்ததால், இருவருக்கும் இடையேயான போட்டி கடுமையாகவே காணப்பட்டது.
from Latest News
0 Comments