வாட்ஸ்அப் வந்த பிறகு ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பலரும் நடமாடும் மருத்துவர்களாகவே மாறிவிட்டார்கள். வருகிற ஃபார்வேடு மெசேஜ்களையெல்லாம் அவற்றின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளாமல், கண்ணை மூடிக்கொண்டு அடுத்தவருக்குத் தட்டிவிட்டுவிட்டு பீதியைக் கிளப்புகிறார்கள்.
அந்த வகையில் ஒரு மெசேஜ் அண்மையில் அதிகம் பகிரப்பட்டது. சரியாகச் சாப்பிடும் முறையைப் பற்றி சொல்லியிருக்கும் அந்த மெசேஜில் ஆரோக்கியமில்லாத உணவுகளின் பட்டியலில் நொறுக்குத்தீனிகள், மைதா, பொரித்த உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகளுடன் பால் பொருள்கள், அசைவ உணவுகளும் இடம்பெற்றிருந்தன.
பிறந்த குழந்தை முதல் அனைவரும் பருகும் பாலும், பெரும்பாலானவர்கள் சாப்பிடும் அசைவ உணவுகளும் ஆரோக்கியமில்லாத உணவுகளா என்று மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசினோம்.
பால் தவிர்க்க முடியாத உணவு! - சுந்தர் ராமன், பொது மருத்துவர்.
``இன்றைய சூழலில் பால் வேண்டாம் என்ற பிரசாரம் அதிகம் நடைபெறுகிறது. நோமில்க்.காம் என ஒரு வலைதளம்கூட உள்ளது. சுத்தமான இயற்கையான உணவுப்பொருள்கள் எதையும் நாம் உண்ணலாம். ஆனால், இன்றைய சூழலில் இயற்கையான பால் கிடைப்பது அரிதாகிவிட்டது. குறிப்பாக, பெரு நகரங்களில் ஆவின் பால் அல்லது மற்ற பாக்கெட் பால்தான் உபயோகிக்க முடியும். பாக்கெட்டில் வரும் பால் பெரும்பாலும் கொதிக்க வைத்துப் பதப்படுத்தப்படுவதால் அதிலிருக்கும் சத்துகள் குறைய வாய்ப்புள்ளது.
மேலும், நூற்றில் 20 பேருக்கு பால் ஒவ்வாமை வரலாம். இதற்கு `லாக்டோஸ் இன்டாலரென்ஸ்' (Lactose intolerance) என்று பெயர். இது செரிமானம் தொடர்பான குறைபாடு. இந்தப் பிரச்னை இருப்பவர்கள் பால் பொருள்களைத் தவிர்க்கலாம். மற்றவர்கள் பால் மற்றும் பால் பொருள்களைச் சேர்த்துக்கொள்வது நல்லது. உடலுக்கு கால்சியம் மிகவும் அவசியம். கால்சியம் பெறுவதற்கு சிறந்த வழி பால் மற்றும் பால் பொருள்களே.
சீத்தா பழத்தில் அதிக கால்சியம் உள்ளது. ஆனால், நாம் அனைவரும் சீத்தா பழம் சாப்பிட முடியுமா? எல்லா சீசனிலும் கிடைக்குமா? எனவே, பால் தவிர்க்க முடியாத ஆரோக்கியமான உணவு.
உணவு, வயிற்றில் இருந்து மலக்குடல் வரை செல்வதற்கு குறிப்பிட்ட நேரம் (transit time) எடுக்கும். காய்கறிகளுக்கு transit time அசைவ உணவைவிட குறைவாக இருப்பதால் இரவு நேரத்தில் அசைவம் உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் செரிமானமாக அதிகம் நேரம் எடுப்பதால் வயிற்றில் அசௌகரியம் ஏற்படும் இதனால் தூக்கம் கெடவும் வாய்ப்பு உள்ளது" என்றார்.
`அசைவத்தில் முட்டையும் மீனும் நல்லது!' - ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன்.
``அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மாமிசங்களைத் தவிர்த்து மீன் உண்ணுவது நல்லது. மீன்கள் எளிதில் செரிமானமாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தையும் அளிக்கும். அதே போன்று முட்டையும் மிகவும் ஆரோக்கியமானது.
முட்டையும் மீனும் சாப்பிடுவது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், ரசாயனங்களால் வளர்க்கப்படும் பிராய்லர் கோழி, எளிதில் செரிமானம் ஆகாத மட்டன் ஆகியவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.
அசைவ உணவுகளில் முடிந்தவரை குறைவான அளவு எண்ணெய் உபயோகிப்பது அவசியம். மேலும் அசைவம் சாப்பிடும்போதும் உடன் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். சமீபகாலமாக அசைவம் சாப்பிடுபவர்கள் அசைவத்துடன் சாப்பிட வேண்டிய காய்கறிகளைச் சாப்பிடாமல் ஒதுக்குகின்றர். அது நல்லதல்ல.
Also Read: கொரோனா காலத்தில் அசைவ உணவு... நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
பால், தயிர், மோர் போன்ற பால் பொருள்களுடன் பருப்பு வகைகளையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சமீபமாக. `பால் மற்றும் பால் பொருள்கள் ஆரோக்கியமில்லாதவை. விலங்குகள் துன்புறுத்தப்பட்டு மெஷின் மூலம் பால் கறக்கின்றனர்' எனப் பல கருத்துகள் பரவி வருகின்றன. நாம் வேத காலம் முதலே பால் மற்றும் பால் பொருள்களை உண்டு வருகிறோம். எனவே எவ்வித அச்சமும் இன்றி உணவில் பால் சேர்த்துக்கொள்வது உடலில் கால்சியத்தை அதிகரிக்க உதவும்" என்கிறார்.
from Latest News
0 Comments