Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனா பலி வீதியிலும் – வீட்டிலும் கிடக்கும் சடலங்கள்..! ஆந்திரா நிலமை மோசம்

ஆந்திராவில் கொரோனாவில் பலியானவர்களின் சடலத்தை தூக்கிசெல்வதற்கு கூட உறவினர்களும், சுகாதாரத்துறையினரும் உதவிக்கு வராத அவலம் அரங்கேறி வருகின்றது. எடுத்துச்செல்ல ஆளில்லாமல் வீதியிலும் வீட்டிலும் சடலங்கள் அப்படியே கிடத்தப்பட்ட சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...... ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரியை சேர்ந்தவர் சுப்பம்மா. அவருடைய மகன் கிரிதர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுப்பம்மா சாய் நகர் காலனியில் உள்ள வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருடைய மகனுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் வெளிப்பட துவங்கின. எனவே கிரிதர் தனக்கும் கொரோனா பெரும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் உடல்நிலை மோசமடைந்து சுப்பம்மா உயிரிழந்தார். வீட்டில் இருந்து வெளியே வர இயலாத நிலையிலிருக்கும் கிரிதர் உறவினர்கள்,அதிகாரிகள் ஆகியோருக்கு தன்னுடைய தாயின் மரணம் பற்றி தகவல் அளித்து உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் சுப்பம்மாவின் உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வரவில்லை. அதேபோல் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. எனவே செவ்வாய் கிழமை இரவு முதல் தன்னுடைய தாயின் உடலை அடக்கம் செய்ய அரசிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும் என்று வீட்டிற்குள்ளேயே அவருடைய உடலை வைத்து கொண்டு மகன் கிரிதர் காத்து கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே போல ஸ்ரீகாகுளம் நகரை சேர்ந்த அஞ்சலி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அஞ்சலியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க ஒப்புக்கொண்ட நிர்வாகம் முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியது. அப்போது அஞ்சலியின் குடும்பத்தினர் போன்பே, கூகுள் பே அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்துகிறோம் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் இங்கு ஒன்லி கேஸ் பேமெண்ட், நோ ஆன்லைன் பேமென்ட் என்று மருத்துவமனை ஊழியர்கள் கறாராக தெரிவித்துவிட்டதால், வேறு வழி இல்லாமல் கொரோனா பாதிப்புக்குள்ளான அஞ்சலியை மருத்துவமனையின் வெளியே உட்கார வைத்துவிட்டு, குடும்ப உறுப்பினர்கள் பணம் திரட்ட சென்றுவிட்டனர். மூன்று மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்டி கொண்டு மருத்துவ மனைக்கு வந்த உறவினர்கள், மருத்துவமனைக்கு வெளியே அஞ்சலி பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உடலை அங்கிருந்து எடுத்துச்செல்ல எவரும் முன் வராத நிலையில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த செய்தியாளர்கள் ராஜேஷ்,ராஜன் ஆகிய இருவரும் இறுதி யாத்திரை வாகனத்தை அழைத்து வந்தனர். கொரோனா பாதுகாப்பு உடையணிந்து கொண்ட அவர்கள் அஞ்சலியின் உடலை அவருடைய உறவினர்களுடன் சேர்ந்து அந்த வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். வடமாநிலங்களை விட பக்கத்து மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நிலைமை மோசமாகி வருவதற்கு இந்த சம்பவங்கள் ஒரு உதாரணம் நமக்கும் பரவி விடுவோ என்று அச்சத்தால் உறவினர்கள் கூட ஒதுங்கிக்கொள்வதால் அங்கு மனித நேயமும் மறித்து போனது தான் வேதனையின் உச்சம்..! அதே நேரத்தில் இக்கட்டான நிலையை பயன்படுத்தி எப்போதும் போல கணக்கில் வராமல் பணம் கறக்கும் வேலையை தனியார் மருத்துவமனைகள் கறாராக சத்தமின்றி செய்து வருவதற்கும் இந்த சம்பவமே சாட்சி..!

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments