மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வந்தது. இந்நிலையில் விமானம், ரயில்கள் மூலமாக ஆக்சிஜன் டேங்கர்கள் நாட்டின் முக்கியமான பகுதிகளுக்கு போர்க்கால அடிப்படையில் விநியோகம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு நேற்றிரவு ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் மருத்துவ திரவ ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவது தொடர்பாக பிரதமர் மோடி காணொலி வாயிலாக உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் கையிருப்பு குறித்து விவாதிக்க அதிகாரிகளின் உயர்மட்டக் குழுவைக் கூட்டிய பிரதமர் மோடி மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.மேலும் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான ஆக்சிஜன் விநியோகத்தைத் துரிதப்படுத்துமாறும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களுக்கு ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாகவும் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனிடையே ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆக்சிஜன் விநியோகத்தை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேரடியாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments