துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் மக்களுடன் இறகு பந்து விளையாடி வாக்கு சேகரிப்பு சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் பொதுமக்களுடன் இறகு பந்து விளையாடி வாக்கு சேகரித்தார். கொண்டிதோப்பு பகுதியில் உள்ள சிவஞானம் பூங்காவிற்கு சென்ற அவர், மக்களுடன் இறகு பந்து விளையாடியும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் பிரச்சாரம் செய்தார். அதைத்தொடர்ந்து அதேபகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற அவர் ஆதரவாளர் ஒருவருக்கு டீ போட்டு கொடுத்து பாஜகவிற்கு ஆதரவு திரட்டினார். ”குழாய் வரியை குறைத்து வசூலிக்க நடவடிக்கை” - துரைமுருகன் வாக்குறுதி வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பழைய காட்பாடி கோட்டை அம்மன் கோவில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மீண்டும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றால் குழாய் வரி 50 ரூபாயாக குறைத்து வசூலிக்க நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி ஆதரவு திரட்டினார். திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வீதிவீதியாக திறந்த வாகனத்தில் சென்று தேர்தல் பிரச்சாரம் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.என்.நேரு அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இத்தொகுதிக்குட்பட்ட தென்னூர், கீரைக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருடன் திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக அப்பகுதியிலுள்ள கோவில் மற்றும் தேவாலயத்தில் வழிபாடு நடத்திய பின்னர் திமுக வேட்பாளர் கே.என்.நேரு தனது பிரச்சாரத்தைத் துவங்கினார். அம்பத்தூர் தொகுதி திமுக வெட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பிரச்சாரம் அம்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜோசப் சாமுவேல் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரை ஆதரித்து திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு விஜயலட்சுமி புரம், பானு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் சென்ற அவர்கள், வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டி.ஆர்.பாலு திமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார். மயிலாப்பூர் திமுக வேட்பாளர் வேலு வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு கமல்ஹாசனுடன் நடித்த ஒரே காரணத்துக்காக நடிகை ஸ்ரீபிரியாவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் வேலு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வேலு மந்தைவெளியில் உள்ள செல்வவிநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடத்திய பின் பரப்புரையைத் தொடங்கினார். வீடுவீடாகச் சென்று உறுதிமொழிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார். அந்தியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகவேலை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சண்முகவேலை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட பொலவக்காளிபாளையம், பழையூர், தாசம்பாளையம், இந்தரா நகர், புலியகாட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் சென்ற அவர், மக்களிடையே அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவுக்கு பாஜகவின் எச்.ராஜா எச்சரிக்கை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரைத் தரக்குறைவாகப் பேசியதற்காக திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேசிய அவர், முதலமைச்சரின் தாயார் பற்றித் தரக்குறைவாகப் பேசியதற்காக ஆ.ராசா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவரை நகரவிடாமல் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஆட்டோ ஓட்டியும் வாக்கு சேகரிப்பு செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஓ.எம்.ஆர். சாலை, மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஆட்டோ ஓட்டியும் வாக்கு சேகரித்தார். இதேபோல் டீ கடை ஒன்றில் தேநீர் அருந்தியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 45 கி.மீ நடைபயணப் பிரச்சாரம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் வகையில் 45 கிலோமீட்டர் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். டி. கல்லுப்பட்டியில் தொடங்கிய இந்த பிரச்சார நடைபயணம் 324 கிராமங்கள் வழியே சென்று திருமங்கலத்தில் நிறைவு பெறுகிறது. இதில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் ஆயிரக்கணக்கான அதிமுகவினர், கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் இதுவரை அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு 6 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது என்றார். 2006-ல் திமுக ஆட்சியில் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுகவின் தேர்தல் அறிக்கையை செல்லாத ரூபாய் நோட்டு எனவும் விமர்சித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments