Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் சூறாவளி பரப்புரை..

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமாரை ஆதரித்து வீதி வீதியாக சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் வாக்கு சேகரித்தார். பட்டமங்கலம் தெரு, புதிய பேருந்து நிலையம், கச்சேரிரோடு, திருவாரூர் ரோடு, கேணிக்கரை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். மக்கள் நிம்மதி, சம உரிமை, சமூக நீதியுடன் வாழ அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் தமிழக மக்கள் நிம்மதியுடன், சமூக நீதி மற்றும் சம உரிமையுடன் வாழ அம முகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அம முக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியஅவர், தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தீவிர வாக்கு சேகரிப்பு தமிழகம் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் கருணாநிதி என்றும் அதனால் ஸ்டாலினுக்கு வாக்கு அளியுங்கள் என்று கூறி ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வாக்கு சேகரித்தார். வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளர் முருகன், ஓசூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ், மற்றும் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமசந்திரன் ஆகியோரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் எடப்பாடியாரே முதலமைச்சராக வருவார் - எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ கே செல்வராஜை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பேசிய அவர், மக்களுக்கு நல்லது செய்ய மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வருவார் எனக் கூறினார். விவசாய உற்பத்தி பொருளுக்கு விவசாயியே விலை நிர்ணயிக்க வேண்டும் உற்பத்தி செய்த வேளாண் பொருளுக்கு விவசாயியே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், விவசாயி மகன்களுக்கு விவசாயிகளே வாக்களிக்காவிட்டால் வெளிநாட்டில் இருந்து யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்றார். சமூக நல்லிணக்கத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் இடம் தரக்கூடாது- வைகோ  தமிழகத்தில் நேர்மையான, பொற்கால ஆட்சி அமைவதற்கு திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வகாப் மற்றும் நெல்லை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார் . அப்போது பேசிய வைகோ, பேரறிஞர் அண்ணா, காயிதேமில்லத் கட்டி எழுப்பிய சமூக நல்லிணக்கத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது என்றார். முதியவர்களின் காலில் விழுந்து ஆதரவு திரட்டினார் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தானேஷ் (எ) முத்துக்குமார் முதியவர்களின் காலில் விழுந்து வாக்குச் சேகரித்தார். புலியூர், உப்பிடமங்கலம் பேரூராட்சி, சணப்பிரட்டி, வீரராக்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் கூட்டணி கட்சியினருடன் சென்று அவர் ஆதரவு திரட்டினார்.   வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்குச் சேகரிப்பு கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தனி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் கதிர்வேல் வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். கம்மநல்லூர், திருக்காம்புலியூர், மாயனூர்,முனையனூர், மணவாசி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் அருணாதேவி ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சண்முகபுரம், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தேநீர் போட்டு கொடுத்தும், பாட்டியுடன் வடை சுட்டும் ஆதரவு திரட்டினார். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை பன்மடங்கு உயர்ந்ததாக விமர்சனம் தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுபினர் பிருந்தா காரத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுக்கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக விமர்சித்தார். திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அவர், கேட்டுக்கொண்டார். கிரிக்கெட் விளையாடி ஆதரவு  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் சிலம்பம் சுற்றி வந்த சிறுவர்களுடன் ஊர்வலமாக வந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், கிரிக்கெட் விளையாடி ஆதரவு திரட்டினார். இந்த தொகுதியின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாகவும் அவர் உறுதி அளித்தார். போலி பட்டுப்புடவை சங்கம் மீது நடவடிக்கை-ராமதாஸ் காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் மகேஷ்குமார் மற்றும் உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் ஆதரித்து ஆகியோரை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராமதாஸ், காஞ்சிபுரத்தில் உருவாகி வரும் போலி பட்டுப்புடவை சங்கத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். நடிகை ராதிகா பிரச்சார வாகனத்தில் ஆட்டம் போட்ட தொண்டர் தென்காசியில் அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் பிரச்சார வாகனத்தில் தொண்டர் ஒருவர் ஏறி ஆட்டம் போட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. தென்காசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் திருமலை முத்துவை ஆதரித்து நடிகை ராதிகா பிரச்சாரம் செய்தார். அப்போது தொண்டர் ஒருவர் ஆர்வக்கோளாறு மிகுதியில் அவரது வாகனத்தில் ஏறி ஆட்டம் போட்டார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை சொக்கத் தங்கத்தை போன்றது - ஜி.கே.வாசன் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை சொக்க தங்கத்தை போன்றது என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கை பித்தளை போன்றது என்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் தங்கமணியை ஆதரித்து பேசிய அவர்,மின்மிகை மாநிலமான தமிழகத்தில் புதிதாக பல தொழில் நிறுவனங்கள் தொடங்கி இருப்பதால் தொழில் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக கூறினார். முதலமைச்சரை இழிவாக பேசிய ஆ.ராசாவை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.வி. ராமலிங்கம் அதிமுக அரசின் சாதனைகளை கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வெள்ளப்பாறை, முத்தம்பாளையம், பண்ணைக்கோடு, தொட்டிப்பாளையம், பால்பண்ணை நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினார். முன்னதாக முதலமைச்சரை இழிவாக பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கைது செய்யக்கோரி அவர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். ரூ.15,000 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். காங்கேயநல்லூர் பிரச்சாரத்தில் பேசிய அவர், தாம் இம்முறை வெற்றி பெற்றால் 15ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பேன் என்றும், 2ஆயிரம் ஏக்கரில் தொழில்பேட்டை அமைப்பேன் என்றும் கூறி ஆதரவு திரட்டினார். குதிரை வண்டிகளில் சென்று நூதன வாக்கு சேகரிப்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிப்பிடும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி அமமுக வேட்பாளார் வீரக்குமார் குதிரை வண்டியில் சென்று பிரச்சாரம் செய்தார். பழனி தொகுதிக்குட்பட்ட ஆயக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக விவசாயிகள் விருப்பம்-அன்புமணி  அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அன்புமணி, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் முடிவு செய்துவிட்டார்கள் என்றார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 என உறுதி தேனி மாவட்டம், கம்பம் தொகுதி திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்மாபட்டி, குரும்பபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எம்மதமும் சம்மதம் எனக் கூறி ஆதரவு திரட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments