Ticker

6/recent/ticker-posts

Ad Code

இறுதிவரை குறையாத படபடப்பு… இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த கடைசி 3 ஓவர்கள்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ரசிகர்களின் இதய ஓட்டத்தை சற்றே சோதித்து விட்டது என்றே சொல்லலாம். ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாமல் இருந்தது. அதற்கு முக்கியமான காரணமாக சாம் கர்ரன் இருந்தார். 

329 ரன்கள் குவித்த இந்திய அணி

புனேவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் அதிரடியுடன் பேட்டிங்கை தொடங்கினர். ரோகித் சர்மா 37 ரன்னில் ஆட்டமிழக்க அரைசதம் கடந்த தவான் 67 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். சீரான இடைவெளியில் வீரர்கள் ஆட்டமிழக்க இறுதிக்கட்டத்தில் ஷர்துல் தாகூர் 3 சிக்ஸர்களுடன் 30 ரன் எடுத்தார். இந்திய அணி 48. 2 ஓவர்களில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

image

இரண்டாவது ஒருநாள் போட்டியில் 336 ரன்கள் என்ற இலக்கையே 45 ஓவர்களுக்கு முன்பு கடந்து அசத்தலான வெற்றியை இங்கிலாந்து அணி பதிவு செய்து இருந்தது இங்கிலாந்து. இதனால், அந்த அணி இந்த ஸ்கோரையும் கடக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதப்பட்டது. இருப்பினும் இந்திய வீரர்கள் எப்படியும் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் இருந்தது.

சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ச்சி

கடந்த போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய ஜான்னி பேரிஸ்டோவை ஒரு ரன்னிலும், அதிரடியோடு ஆட்டத்தை துவக்கிய ஜாஸன் ராயை 14 ரன்னிலும் நடையை கட்ட வைத்து நம்பிக்கை அளித்தார் புவனேஸ்வர் குமார். அத்துடன் ரன் குவிப்பில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸை 35 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க செய்தார் நடராஜன். பட்லரும் 15 ரன்களுக்கு ஷர்துல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க 95 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. அந்த தருணத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

ஆனால், டேவிட் மாலன் மட்டும் அரைசதம் அடித்து அவுட் ஆக, அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 36, மொயின் அலி 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தாலும் ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர். 200 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதனால், மேற்கொண்டு 130 ரன்கள் எடுக்க வேண்டியிருந்ததால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்று விடும் என்று கருதப்பட்டது. அந்த எண்ணத்திற்கு சவால் விடுக்கும் வகையில் சாம் கர்ரன் ஆட்டம் இருந்தது. தனி ஒருவனாக அதிரடியாகவும், நிதானமாகவும் விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 

அவருக்கு ஒத்துழைப்பு அளித்த அடில் ரஷித் 19, மார்க் உட் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச் சென்றார் சாம் கர்ரன். 

கடைசியில் அதிரடி காட்டி சதத்தை நெருங்கி இந்திய அணிக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். 

ஆட்டத்தை மாற்றிய அந்த மூன்று ஓவர்கள்

கடைசி 4 ஓவர்களில் அதாவது 24 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ஷர்துல் தாக்கூர் வீசிய 47வது ஓவரில் சாம் கர்ரன் அதிரடியாக விளையாடி இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசியதால் அந்த ஓவரில் 18 ரன்கள் எடுக்கப்பட்டது. அதனால், கடைசி 3 ஓவர்களில் வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மிகவும் எளிதான ஒன்றுதான். அந்த நேரத்தில்தான் புவனேஸ்வர் குமாரை பந்துவீச அழைத்தார் விராட் கோலி. அது அவருக்கு கடைசி ஓவர். ரன்களை கட்டுக்குள் வைக்கும் நோக்கிலே புவனேஸ்வரை அவர் அழைத்திருக்கக் கூடும். விராட் கோலி எதிர்பார்த்தது போலவே அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை. 

கடைசி 2 ஓவர்களில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 49வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஷர்துல் தாக்கூரும், நடராஜனும் அடுத்தடுத்து இரண்டு கேட்சுகளை கோட்டை விட்டனர். இருந்த போதும் இந்த ஓவரிலும் வெறும் 5 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. கடைசி இரண்டு ஓவர்களில் பவுண்டரிகள் எதுவும் அடிக்கப்படவில்லை.

கடைசி ஓவரில் 14 ரன்கள் என்ற பரபரப்பான கட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் பந்து வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே மார்க் உட் ரன் அவுட்டாகி பரபரப்பை கூட்டினார். எனினும் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி உள்பட 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதில் இரண்டு டாட் பந்துகள் அடங்கும். நடராஜன் ஓவரில் தொடர்ச்சியாக ரன்கள் எளிதில் அடிக்கப்பட்ட போதும் இக்கட்டான நேரத்தில் இறுதி ஓவரை வீசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

இந்திய அணியின் வெற்றிக்கு புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, நடராஜன் ஆகியோர் சிறப்பாக வீசிய அந்த கடைசி மூன்று ஓவர்கள் தான் காரணம். புவனேஸ்வர் குமார் தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசசி 3 விக்கெட் வீழ்த்தியதோடு 10 ஓவர்களில் 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஏற்கனவே டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரையும் தன்வசப்படுத்தியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments