பொதுத்துறை சொத்துகள் விற்பனை மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பொதுசொத்துகள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் ஏழை மக்கள் வாழ்வுக்குப் பயன்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொதுத்துறை சொத்துகள் விற்பனை குறித்து பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டதையடுத்து எதிர்க்கட்சியினரிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து பதிலளிக்கும் விதமாக பேசிய பிரதமர் மோடி, பொதுத்துறை சொத்துகள் விற்பனை மூலமாகக் கிடைக்கும் பணம் நாட்டின் ஏழை மக்கள், குடிமக்கள் நலன்களுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் பயன்படும் என்று தெரிவித்துள்ளார். தனியார் மயமாக்கலுக்கு தமது முழு ஆதரவை வெளியிட்ட பிரதமர் மோடி இப்பணம் மக்களுக்கு சொந்தமானது என்றார். பொதுத்துறையின் சொத்துகள் நாட்டின் பொருளாதாரம் மீது சுமையாக அழுத்துவதாகவும் மோடி தெரிவித்தார். பல ஆண்டுகளாக இருப்பதால் அரசு இந்த பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாயமில்லை என்று கூறிய மோடி, அரசுக்கு தொழில் செய்ய வேண்டிய கட்டாயமும் எந்த தொழில் நோக்கமும் தேவையில்லை என்றார். விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய், எரிவாயு, மின்சாரம் தொடர்பான பொதுத்துறை சொத்துகள் மூலம் மத்திய அரசு சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments