சிதம்பரம் அடுத்த கிள்ளையில் மாசிமக தீர்த்தவாரிக்குச் செல்லும் பூவராகசாமிக்கு தர்காவில் இருந்து பட்டாடை கொடுத்து வழியனுப்பி வைக்கும் மத நல்லிணக்க வைபவம், 200 ஆண்டுகளைத் தாண்டியும் வழக்கத்தில் இருந்து வருகிறது. சாமி ஊர்வலத்திற்கு நவாப் வழங்கிய நன்கொடை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி, கிள்ளை கடற்கரைக்கு மாசிமக திருவிழாவையொட்டி தீர்த்தவாரிக்கு செல்வது வழக்கம். கடந்த 1891 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே கிள்ளை தைக்கால் தர்கா வழியாக சுவாமி ஊர்வலம் செல்ல பாதை இல்லாத நிலையில், தர்கா நிர்வாகம் சார்பில் வக்பு சொத்து மூலம் சுவாமி செல்வதற்கு வழி அமைத்துக் கொடுப்பதற்காக 15 ஏக்கர் நஞ்சை நிலம் 10 ஏக்கர் புஞ்செய் நிலம் தானமாக கொடுக்கப்பட்டது. அதில் அமைக்கப்பட்ட சாலை வழியாக சுவாமி ஊர்வலம் வரும் போது நன்றிக்கடன் செலுத்தும் விதமாக கிள்ளை தர்கா சார்பில் படையல் வைத்து பட்டாடை அணிவித்து சுவாமியை வரவேற்று வழி அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மாசிமகத் திருவிழாவில் ஸ்ரீ முஷ்ணத்திலிருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கிள்ளைக்கு வருகை புரிந்த பூவராகசுவாமிக்கு கிள்ளை தைக்கால் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிவாசல் நிர்வாகி சையது சகாப் தலைமையில் நூற்றாண்டு பாரம்பரிய முறைப்படி சுவாமிக்கு பட்டாடை சாத்தி தேங்காய் பழம் வைத்து வழிபட்டனர். இதில் இந்துக்களும் முஸ்லிம்களும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பூவராகசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் ரகமத்துல்லா தர்காவில் நாட்டு சக்கரை வைத்து படையல் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது. மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் தொன்று தொட்டு இந்த விழா நடைபெற்று வருவதாகவும், சாமிக்கு வைத்த படையல் தேங்காய் அனைத்தையும் தர்காவுக்கு எடுத்து வந்து அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்வோம் எனவும் தர்கா நிர்வாகி சையது சகாப் கூறினார் இது போன்ற இறுக்கமாண பாசப்பிணைப்புகள் இருப்பதால் தான் தமிழகத்தில் மதங்கள் கடந்து சாமானிய மக்களிடம் மனிதம் இன்னும் நிலைத்திருக்கின்றது..!
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments