Ticker

6/recent/ticker-posts

Ad Code

"சசிகலாவை எளிதில் எடை போடக்கூடாது; காத்திருங்கள்!" - கருணாஸ் எம்.எல்.ஏ

"பிரதமர் மோடியின் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரை தமிழகத்தின் முதல்வராக தீர்மானம் செய்தவர் சசிகலா. சசிகலாவை எளிதில் எடை போடக்கூடாது. காத்திருங்கள்" என்று எம்.எல்.ஏ கருணாஸ் கூறினார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கூவத்தூரில் என்ன நடைபெற்றது என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். சசிகலா பற்றி இன்று கூறுபவர்கள், அன்று என்ன சொன்னார்கள் என்பது அனைத்து ஊடகங்களிலும் உள்ளது. பிரேமலதா விஜயகாந்த் கருத்து வரவேற்க கூடியது. எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

image


தேவரினம் என்ற அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது 26 ஆண்டுகால கோரிக்கை. இந்த கோரிக்கை தொடர்பாக பலமுறை சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் மனுவும் அளித்துள்ளேன். மற்ற சமுதாய மக்கள் சுபிட்சமாக வாழவேண்டும் என்று முதல்வர் நினைக்கிறாரோ அதேபோன்று முக்குலத்தோர் சமூகமும் வாழவேண்டும் என்று முதல்வர் நினைக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைகளை தேர்தலுக்கு முன்பு முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.

அரசியல் நிர்பந்தம் காரணமாக முதல்வர் ஒருசில சமூக மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்காக ஏதேனும் ஒரு அரசாணை வெளியிட்டால் அது அவருக்கும் வரக்கூடிய தேர்தலுக்கும், நல்ல ஒரு அம்சமாக அமையாது. முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதற்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா. இதில் மாற்றுக் கருத்தில்லை. ஜெயலலிதா, சசிகலா உருவாக்கிய இந்த ஆட்சிக்கு சிறு இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

அதனால்தான் இந்த நிமிடம் வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக, அதிமுகவுடன் தோழமையுடன் இருக்கிறோம். அது தொடரும். சசிகலாவை தற்போது வேண்டாம் என்று கூறுபவர்கள்தான் அவரை பொதுச் செயலாளர் என்று கூறினர். காலத்தின் நிர்பந்தம் காரணமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

எத்தனை காலங்கள் வந்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது. உண்மை ஒருநாள் வெளிவரும். அதிமுகவிற்கு பின் பாஜக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதிமுக தலைமை சசிகலாவிற்கு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர்கள் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜக என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும்.

பிரதமர் மோடி வல்லவராக இருந்தாலும், தமிழகத்தில் வேறு ஒருவரை முதல்வராக கொண்டுவர நினைத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பிரதமர் மோடியின் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரை தமிழகத்தின் முதல்வராக தீர்மானம் செய்தவர் சசிகலா என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

ஜெயலலிதா, மம்தா பானர்ஜி கட்சி, முதல்வர் என்ற பதவியில் இருந்தனர். எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஒருவரால் இப்பேர்பட்ட காரியங்களையும் செய்ய முடியும் என்று உலகத்திற்கு நிரூபணம் செய்தவர் சசிகலா. சசிகலாவை எளிதில் எடை போடக்கூடாது. காத்திருங்கள்” என்று கருணாஸ் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments