தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாகுபலி 'கெட்டப்பில்' இரண்டாவது முறையாகப் பதவியேற்பது போல் சித்தரித்து, கள்ளக்குறிச்சியில் அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர். தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக, ஆளும்கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவினர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் வேட்பாளர்களை ஆதரித்து போஸ்டர் ஒட்டியும் பேனர் வைத்தும் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மாதவச்சேரி கிராமத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாகுபலி கெட்டப்பில் இரண்டாவது முறையாகப் பதவியேற்பதைப் போல வைக்கப்பட்டுள்ள பேனர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. அந்தப் பகுதியில் செல்லும் பலரும் இந்த பேனரை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள். கள்ளக்குறிச்சி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஏஎஸ்ஏ ராஜசேகர் என்பவரின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள தமிழரசன் என்பவர் இந்த டிஜிட்டல் பேனரை வடிவமைத்து வைத்துள்ளார். பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகன் பிரபாஸ் ’மகேந்திர பாகுபலி எனும் நான்’ என்று வசனம் பேசியபடி கை தூக்கும் கெட்டப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. பாகுபலியின் இரண்டாவது பாகத்தைப் போலவே எடப்பாடி பழனிசாமியும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்குவதைப் போல அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனர் அதிமுகவினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்..!
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments